/indian-express-tamil/media/media_files/2024/12/14/jMdVOMGVhxl3sFKW3PaT.jpg)
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆரை பொன்மனச் செம்மல் என்றும், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்றும் மக்கள் போற்றுகின்றனர். அந்த அளவிற்கு பலருக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்து இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், தங்களுக்கு செய்த உதவியை ஏராளமானவர்கள் இன்றளவும் கூட நினைவு கூறுகின்றனர். இது மட்டுமின்றி தன்னை காண வரும் அனைவரும் சாப்பிட்டு விட்டுச் செல்வதை உறுதி செய்யும் ஒரு வழக்கமும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. தனது தோட்டத்து வீட்டில் எப்போதும் மற்றவர்களுக்கு சாப்பாடு தயார் செய்யும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாகவும் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். இந்த சூழலில் அப்படி ஒரு சம்பவத்தை கவிஞர் வாலி பதிவு செய்துள்ளார்.
தற்போது ட்ரெண்டாகும் பழைய நேர்காணல் ஒன்றில் இதனை வாலி குறிப்பிட்டுள்ளார். அதில் "தன்னை சந்திக்க வருபவர்கள் ஒருவர் கூட சாப்பிடாமல் செல்வதை எம்.ஜி.ஆர் அனுமதிக்க மாட்டார். அவரது தோட்டத்தில் இருந்து எப்போதுமே 10 முதல் 15 பேருக்கு சாப்பாடு வந்து கொண்டிருக்கும். சத்யா ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரின் மேக்கப் அறைக்கு அருகே ஒரு சிறிய அறை இருந்தது.
அந்த அறையில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை எம்.ஜி.ஆர் கடைபிடித்தார். ஒரு முறை அந்த அறையில் நான், எம்.ஜி.ஆர், லதா, இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தோம். அப்போது, என் நண்பர் வெளியே காத்திருந்தார். அவரை உணவகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நான் எழுந்தேன். ஆனால், நான் அவரை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் அறிவுறுத்தினார்.
மேலும், எனது நண்பரை உள்ளே அழைத்து வந்த எம்.ஜி.ஆர், லதாவை எழுந்திருக்க சொல்லி விட்டு, தனது அருகே என் நண்பரை அமருங்கள் என்று கூறி சாப்பிட வைத்தார்" என்று வாலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனக்கு தெரியாதவர்களை கூட அன்பாக உபசரிக்கும் எம்.ஜி.ஆரின் குணத்தை பலரும் அறிந்து கொள்ள முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.