இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25ஆம் தேதி) காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநராக பார்க்கப்படும் பாரதிராஜாவின் மகனான இவர் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
சிங்கம் பெத்த பிள்ளை:
மனோஜின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் நேரில் வந்தும் சமூக ஊடகங்கள் மூலமும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,
"மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா? 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?
காலத்தின் கொடுமை:
"எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா? முதுமை - மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை. வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை சாவுக்குக் கண்ணில்லை எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்" என தன் துயரைக் கூறியுள்ளார்.
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?
மனோஜை அறிமுகப்படுத்திய வைரமுத்து:
பாரதிராஜாவின் மகன் மனோஜ் "தாஜ்மகால்" படத்தின் மூலம்தான் முதன்முதலில் தமிழ் மக்களிடம் அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் பாடல்கள் படம் வெளிாகும் முன்பே நல்ல ஹைப்பை கொடுத்ததால், படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் அந்தப் படத்தில் "திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா" பாடல், அந்த காலத்து இளைஞர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்ற பாடல். ஹீரோ அறிமுகப் பாடலான இதனை வைரமுத்துதான் மனோஜிற்காக எழுதி இருப்பார். பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்த இந்தப் பாடலை நினைவு கூர்ந்து இப்போது மனோஜின் மறைவை நினைத்து வருந்தி பதிவிட்டுள்ளார்.
உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?
இயக்குநர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான வைரமுத்து, மகனின் துக்கத்தால் கலங்கி நிற்கும் உன் தகப்பனை எப்படி தேற்றுவேன் எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். சினிமாவில் தன் கனவுகள் இன்னும் உள்ளது. படம் எடுக்க காத்திருப்பதாக கூறி வந்த மனோஜ் திடீரென உயிரிழந்த நிலையில், உன் கனவுகள் கலைந்து விட்டதா எனக் கேட்டும் சாவுக்கு கண் இல்லை என்றும் வைரமுத்து வசைபாடியுள்ளார்.