/indian-express-tamil/media/media_files/2025/01/12/XwZ6pYfP5NhnKaWYOgPI.jpg)
மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இத்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் ரசனை பெருமளவு மாறியுள்ளது. அதனப்படையில், 12 ஆண்டுகள் பழைய திரைப்படம், ரசிகர்களை கவர்ந்துள்ளதா என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, அதனை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் சுந்தர்.சி. காமெடி, ஆக்ஷன், பேய்ப்படங்கள் என பல வகையான திரைப்படங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, தற்போது நட்பு மற்றும் நண்பர்கள் குறித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் மத கஜ ராஜா. இப்படத்திலும் தனது ட்ரேட்மார்க் காமெடி மற்றும் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார்.
விஷால், வரலட்சுமி, அஞ்சலி என பலர் இப்படத்தில் நடித்திருந்தாலும் காமெடியனாக வரும் சந்தானத்திற்கு திரையரங்குகளில் கரகோஷம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, மறைந்த கலைஞர் மனோபாலாவுடன் இருக்கும் சந்தானத்தின் காமெடி காட்சிக்கு நல்ல வரவேற்கு கிடைத்துள்ளது. இதேபோல், லொல்லு சபா கூட்டணியான மனோகர், ராஜேந்திரனும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
படத்தின் முதல் பாதி காமெடியுடன் நகர்ந்து, இரண்டாம் பாதி கதைக்குள் வேகமெடுக்கிறது. தனது நண்பர்களான நிதின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷுக்காக, படத்தின் வில்லன் பாத்திரமான சோனுவை விஷால் எதிர்ப்பதில் இருந்து பரபரக்கும் ஆக்ஷன் தொடங்குகிறது.
தொலைக்காட்சிகளில் சுந்தர்.சி திரைப்படத்தின் காமெடி காட்சிகளை எதற்காக அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள் என்ற கேள்விக்கு மத கஜ ராஜா பதிலளித்திருக்கிறது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருக்க வேண்டிய படம் தற்போது திரைக்கு வந்திருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும் வகையில் காமெடி காட்சிகளை சுந்தர். சி வடிவமைத்துள்ளார். எனினும், சில இடங்களில் இருக்கும் ஆணாதிக்க வசனங்கள், அதிகப்படியான கிளாமர் காட்சிகள் மற்றும் அதற்கு ஏற்ற வகையில் இருக்கும் கேமரா கோணங்கள் படத்தின் குறையாக இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் சுந்தர். சி-யின் திரைப்படங்கள், எப்போதும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என்பதற்கு மத கஜ ராஜா ஒரு உதாரணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.