நடிகர் மாதவன் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக தன்னுடைய அம்மாவிடம் கூறியதை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், ரன் உள்ளிட்ட ரொமான்டிக் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் சாக்லெட் பாய் என அழைக்கப்பட்டார்.
பின்னர் கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து உள்ளிட்ட படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் மாதவன் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி, ராக்கெட்ரி நம்பி எபெக்ட் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறந்த இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் மாதவன் உருவெடுத்தர். இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.
இந்நிலையில் Netflix ஒரிஜினல் ஓடிடி தளத்தில் மாதவன் நடித்துள்ள வெப் சீரீஸ்' தி ரயில்வே மென்' வெளியாக உள்ளது. போபால் விஷவாயு கசிவை மையமாகக் கொண்ட இந்த சீரிஸில் ஜூஹி சாவ்லா, கே கே மேனன், பபில் கான் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மாதவன், நடிகை ஜூஹி சாவ்லாவை தான் திருமணம் செய்ய விரும்பியதாக கூறினார்.
இந்த தொடரில் நடித்துள்ள ஜூஹி சாவ்லா முன் பேசிய மாதவன், "நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும், மேலும் அனைவருக்கும் முன்பாக வாக்குமூலம் அளிக்க விரும்புகிறேன். கயாமத் சே கயாமத் தக் (QSQT), படத்தை பார்த்தபோது, 'நான் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று என் அம்மாவிடம் கூறியிருந்தேன். ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்போது எனது ஒரே நோக்கமாக இருந்தது," என்று கூறினார்.
மேலும் இந்த வெப் சீரிஸிலும் ஜூஹியுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அவரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னரே என்னுடைய காட்சி படமாக்கப்பட்டது என்றும் மாதவன் தெரிவித்தார்.
ஜூஹி சாவ்லா, நடிகர் மாதவனை விட மூன்று வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டதை வெளிப்படையாக கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“