/indian-express-tamil/media/media_files/2025/09/08/screenshot-2025-09-08-173356-2025-09-08-17-34-15.jpg)
மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அசைவ பிரியர்களின் மெனுவில் பிரியாணிக்கு அடுத்த படியாக இருக்கும் ஐயிட்டம் இதுவாக தான் இருக்கும். இதன் தனித்துவமான மணமும், எளிமையான சமைக்கும் முறையும், பார்த்த உடனேயே நாக்கில் எச்சரில் ஊற வைத்து விடும். மட்டன் சுக்காவை சாதாரணமாக செய்வதை விட, ஒருமுறை பாரம்பரிய மதுரை ஸ்டைலில் செய்து சாப்பிட்டு பாருங்க. அந்த சுவை நாக்கிலேயே ஒட்டிக் கொள்ளும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டியது)
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (இரண்டாக வெட்டியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கைபிடு
மல்லித்தழை – சிறிதளவு (அலங்காரத்திற்காக)
நெய்/எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா பொடி தயாரிக்கும் முறை:
(இந்த மசாலா மட்டன் சுக்காவிற்கு ஒரு தனி சுவை கொடுக்கும்)
பெருங்காயம் – சிறிதளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கசகசா – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
இவற்றை லேசாக வாசம் வரும் வரை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
முதலில், ஒரு குக்கரில் மட்டன், மஞ்சள்தூள், உப்பு, சிறிது மிளகாய்தூள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரை வேக வைக்க வேண்டும். வேக வைத்த பிறகு, அதில் உள்ள நீரை வடிக்காமல் வைத்திருக்கவும். பின்னர், ஒரு பெரிய கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் தக்காளியைச் சேர்த்து, அது நன்கு மெலிதாக வெந்தவுடன், முன்பே வேக வைத்த மட்டனைச் சேர்க்கவும்.
அதன் மீது தேவையான அளவு மசாலா பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி வதக்க வேண்டும். பிறகு, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் மட்டன் மென்மையாகும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கடைசியாக மிளகுத் தூள் மற்றும் சோம்புத்தூளைச் சேர்த்து நன்றாக கிளறி, மேலே கொத்தமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கலாம்.
அவ்வளவு தான் மதுரை ஸ்டைல் அட்டகாசமான, காரசாரமான மட்டன் சுக்கா ரெடி!
சூடாக இருக்கும் போது பரிமாறவும். இதை பரோட்டா, சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அல்லது சாதாரண ரொட்டியுடன் சாப்பிடலாம். பிரியாணி, தயிர் சாதத்திற்கு அசத்தலான சைட் டிஷ் இது. இதில் சேர்க்கப்பட்டுள்ள இஞ்சி, பூண்டு, மிளகு, தனியா, சோம்பு போன்றவை வாசனை, சுவைக்காக மட்டுமல்ல, எளிதில் ஜீரணமாக உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.