லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் படத்தை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அக்.15-முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் எனக் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில இடங்களில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் கோபுரம் திரையரங்கில் நேற்று மதியம் 12 மணியளவில் முதல் நாளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் மொத்த டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளது.
மதுரையில் சுமார் 20 திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. நேற்று ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே முன்பதிவு தொடங்கப்பட்டது. லியோ படத்திற்கான டிக்கெட் ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள திரையரங்குகளில் இன்று மற்றும் நாளை மறுநாள் முன்பதிவு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் மதுரையில் உள்ள சினிபிரியா திரையரங்கு பெயரில் போலி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. லியோ படம் வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி பிரீமியர் காட்சி திரையிடப்படுவதாக கூறி சமூக வலைதளங்களில் செய்தி பரவின.
இதையடுத்து சினிபிரியா திரையரங்கு உரிமையாளர்கள் போலி டிக்கெட் விற்பனை குறித்து எச்சரிக்கை பதிவு வெளியிட்டனர். “அன்புள்ள விஜய் ரசிகர்களே. சமீப நாட்களில் போலி டிக்கெட் விற்பனை குறித்து தகவல்கள் வருகின்றன. அந்த ப்ராக்ஸி (போலி) டிக்கெட்டுகளுக்கு எங்கள் சினிப்ரியா நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதால், அந்த ப்ராக்ஸி டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“