Magamuni Movie Review, Public Reactions: ’மெளனகுரு’ படத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ‘மகாமுனி’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நம் சந்ததியையே சேரும். அதை நாம் நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நல்லதா, கெட்டதா என்ற கேள்வியோடு வந்திருக்கிறது மகாமுனி. இதில் மகாதேவன், முனிராஜ் என்ற இரு அழுத்தமான பாத்திரங்களில் நம்மை திகைக்க வைக்கிறார் ஆர்யா. பொதுவாக ஹீரோ, இரட்டை வேடங்களில் நடித்தால், ஒருவர் நல்லவராகவும், மற்றொருவர் கெட்டவராகவும் இருப்பார். அதே வழக்கம் இந்தப் படத்திலும் இருந்தாலும், அதன் ஃபார்முலா மாற்றப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தில் வசித்து வரும், டாக்ஸி டிரைவரான மகாதேவன், கூலிக்காக கொலை செய்கிறார், அரசியல்வாதி இளவரசுவுக்காக பல வேலைகளை செய்கிறார். அவரின் மனைவி இந்துஜா. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. முனிராஜ் பக்திமான். மலையில் விதை விதைப்பது, இயற்கை விவசாயம் பார்ப்பது, டியூஷன் எடுப்பது என ஈரோட்டில் வசித்து வருகிறார்.
முனி மீது மஹிமாவுக்கு காதல், இதைத் தெரிந்துக் கொண்ட அவரின் அப்பா ஜெயப்பிரகாஷ், முனியை கொல்ல திட்டம் போடுகிறார். இதற்கிடையே ஒரு கொலையை செய்து விட்டு, போலிஸிடமிருந்து தப்பித்த மகாதேவன் ஈரோடு வருகிறார், அங்கு வரும் போலீஸ், மாகா என்று நினைத்து முனியை கைது செய்கிறார்கள். அதன்பின் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
’நான் கடவுள்’ படத்தின் அகோரி பாத்திரத்திற்குப் பிறகு, மகாமுனி படத்தின் ‘முனி’ கேரக்டரில் தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்யா. மகா என்ற கதாபாத்திரம், இயல்பாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ‘கிளாம்டாலாகவோ’ அல்லது ‘டூயட், ரொமான்ஸுக்கு மட்டும்’ என்ற நிலையில் தான் இருக்கும். ஆனால் மகாமுனி படம் அப்படியில்லை. இந்துஜா, மஹிமா இருவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.
சாதி வெறி பிடித்த ஜெயப்பிரகாஷ், அரசியல் வெறி பிடித்த இளவரசு, இருவரின் கதாபாத்திரங்களிலும் சினிமாத்தனம் கொஞ்சமும் இல்லை. தமனின் பாடல்களை விட பின்னணி இசை தெறிக்கிறது. முக்கிய திருப்பங்கள் நிகழும் இரண்டாம் பாதியின் திரைக்கதையை சற்று சுவாரஸ்யமுடன் விறுவிறுப்பாக்கியிருக்கலாம். இருப்பினும் பெரிய உறுத்தல்களின்றி ‘மகாமுனியை’ நிச்சயம் பார்க்கலாம்!