பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் நடிகர் மஹத் ராகவேந்திரா அவரது காதலி மிஸ் இந்தியா பிராச்சி மிஷ்ராவை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு நடிகர் சிம்பு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.
அஜித் நடித்த மங்காத்தா, விஜய்யின் ஜில்லா படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
மஹத்தும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான மாடல் பிராச்சி மிஷ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்த நடைபெற்றது. மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தாவுடன் சினிமாவில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், மஹத்துக்கும் பிராச்சி மிஷ்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் இவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். நடிகர் சிம்பு நேரில் சென்று மஹத்தையும் பிராச்சி மிஷ்ராவையும் வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மஹத் தனது திருமணத்தை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் பிராச்சி மிஷ்ராவுடன் இருக்கும் புகைப்படங்களை கொலாஜ் செய்து வெளியிட்டுள்ளார். அதில் மஹத் எழுதியுள்ள பதிவு அனைவரையும் ஈர்த்துள்ளது.
மஹத் இன்ஸ்டாகிராமில், “இது எப்படி ஆரம்பித்தது என்று யாராவது என்னிடம் கேட்டால், என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அது நடந்தது, அதை மிகவும் சரியாக உணர்ந்தேன். நீ என் வாழ்க்கையில் வந்து எல்லாவற்றையும் கொஞ்சம் சிறப்பாக செய்தாய். நாம் மோசமான நாட்களில் இருந்து கற்றுக் கொண்டோம். நல்லவற்றைக் கொண்டாடினோம். மிக முக்கியமாக, ஒவ்வொரு துளியிலும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டு வளர்தோம். நமக்கு திருமணமாகி ஒரு நாள் தான் ஆகி இருக்கிறது. நான் வெகுதூரம் வந்திருப்பது அதிர்ஷ்டம், பாக்கியம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் பிராச்சியை ரசித்திருக்கிறேன். எதிர்காலம் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்பதைக் காண மகிழ்ச்சியடைகிறேன். நமக்கு நல்ல நேரம் வரும் என்று எனக்குத் தெரியும்! நன்றி. ஐ லவ் யூ...” என்று தெரிவித்துள்ளார்.