கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்துள்ள மலையாள நடிகர் மோகன்லால், அப்பகுதியில் இடிந்துபோன பள்ளிக்கூடத்தை கட்டித்தருவதாக தெரிவத்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல பகுதிகளில் அதிதீவிர கனமழை பெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் வயநாடு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பலர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு தமிழகத்தின் படையும் பணியாற்றி வருகிறது.
இதனிடையே வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் நிவாரணப்பணிக்காக, நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், ஜோதிகா, மலையாள நடிகர் மம்முட்டி, நஸ்ரியா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மலையாள நடிகர் மோகன்லால், ரூ 3 கோடி நிதியுதலி அளித்துள்ளார். மேலும், முண்டக்கை பகுதியில் சேதமடைந்துள்ள பள்ளிக்கூடத்தை கட்டித்தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டிவரும் நிலையில், தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடிகை நிகிலா விமல் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் வயநாடு பகுதியில், 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் 23 தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“