தமிழ் சினிமாவில் ஃபீல்குட் படங்களை இயக்கி வெற்றி கண்ட சேரன் நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ள நிலையில், தற்போது அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ள நரிவேட்டை திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் தமிழ் சினிமாவில், 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் டோவினோ தாமஸ் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகிறார். மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல், பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதேபோல் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் மற்றும் எல் 2 எம்புரான் ஆகிய 2 படங்களிலும் மோகன்லாலின் தம்பி கேரக்டரில் நடித்து அசத்திய டோவினோ தாமஸ் மலையாளத்தில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில், அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள படம் தான் 'நரி வேட்டை' உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் ஒருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில், சேரன் போலீஸ் அதிகாரியாக 'கேசவதாஸ்' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தமிழில் போலீஸ் அதிகாரியாக சேரன் நடித்த யுத்தம் செய் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நரி வேட்டை திரைப்படம், மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்த "நரிவேட்டை" திரைப்படம் படம் கடந்த மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த 'நரிவேட்டை' படம் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 11-ந் தேதி இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் இந்த படத்தை மிஸ் செய்தவர்கள் ஒடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.