/indian-express-tamil/media/media_files/2025/09/20/mohanlal-amma-controversy-2025-09-20-20-08-36.jpg)
40 ஆண்டு கால சினிமா பயணம்... மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவின் பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமூக வலைத்தளத்தில், "தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில், 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லாலுக்கு வழங்கப்படுவதை இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
மோகன்லாலின் அசாதாரணமான திரைப்படப் பயணம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது! இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக இந்த புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கௌரவிக்கப்படுகிறார். அவரது இணையற்ற திறமை, பல்துறை நடிப்பு மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு பொற்கால தரத்தை அமைத்துள்ளது" என பதிவிட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மோகன்லால், 1978-ம் ஆண்டு தனது முதல் மலையாளத் திரைப்படமான 'திறனோட்டம்' மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இது அவரது நீண்டகால நண்பரான பிரியதர்ஷனுக்கும் முதல் படமாக அமைந்தது. அன்று முதல், அவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விருதுகள்:
2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் பெற்றார். 5 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். (2 சிறந்த நடிகர் விருதுகள், ஒரு சிறப்பு நடுவர் விருது, ஒரு சிறப்பு நடுவர் பாராட்டு, மற்றும் ஒரு சிறந்த திரைப்படத்திற்கான விருது (தயாரிப்பாளராக)). 9 கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். 'நமக்கு பார்க்கான் முந்திரித்தோப்புக்கள்', 'கிரீடம்', 'தசரதம்', 'பாரதம்', 'வனபிரஸ்தம்', 'மணிச் சித்திரதாழ்' மற்றும் 'தாழ்வாரம்' ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள். சமீபத்தில் வெளியான 'ஹ்ருதயபூர்வம்' திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிற மொழிப் படங்கள் மற்றும் சாதனைகள்
மோகன்லால் பெரும்பாலும் மலையாளத் திரையுலகில் பணியாற்றியிருந்தாலும், அவரது பிற மொழிப் படங்களான மணிரத்னத்தின் தமிழ் அரசியல் நாடகத் திரைப்படமான 'இருவர்' (1997), இந்தி க்ரைம் நாடகத் திரைப்படமான 'கம்பெனி' (2002), மற்றும் தெலுங்குப் படமான 'ஜனதா கேரேஜ்' (2016) போன்றவை பெரும் பாராட்டுகளைப் பெற்றன. மேலும், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட 'திருஷ்யம்' திரைப்படத்தின் முக்கிய முகமாகவும் அவர் திகழ்கிறார். இதன் மூன்றாவது பாகம் தற்போது தயாரிப்பில் உள்ளது.
சமீபத்தில், பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கிய மற்றும் இணைந்து நடித்த 'L2: எம்புரான்' என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை மோகன்லால் கொடுத்தார். இத்திரைப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கு மேல் வசூலித்து மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. எனினும், அந்த சாதனை சமீபத்தில் வெளியான 'லோகா: சாப்டர் 1' என்ற சூப்பர்ஹீரோ திரைப்படத்தால் முறியடிக்கப்பட்டது. வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமாக மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், மேடை நாடக கலைஞர், மற்றும் எழுத்தாளர் என பல பரிமாணங்களில் மோகன்லால் பணியாற்றியுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது சமீபத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, வாஹீதா ரஹ்மான், மற்றும் ஆஷா பரேக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதில் ஸ்வர்ண கமல், சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை அடங்கும். முதல் விருது தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவின் 'முதல் பெண்மணி' என்று பரவலாக அறியப்படும் அவர், பம்பாய் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தியாவின் ஆரம்பகால வெற்றிகரமான சில படங்களை தயாரித்தவர். இந்த விருது, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் மோகன்லாலுக்கு வழங்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.