மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இயக்குனர் மணிரத்னம் பங்கேற்ற நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆங்கிலம், அரபி என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 1992-ம் ஆண்டுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்த அத்தனை படங்களின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்துள்ளது. இதன் காரணமாக மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் தனது தனித்துவமான இசையை கொடுத்து பாடல்களை வெற்றிப்பாடலாக மாற்றியுள்ளார்.
இதனிடையே பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வரும் 28-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், மணிரத்னமும் – ஏ.ஆர்.ரஹ்மானும் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குறித்து பேசிய இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூன்கள் பொதுவில் வருவதற்கோ அல்லது இயக்குனருக்கு கொடுக்கப்படுவதற்கு முன்பு முன்பு, அவரது ஹெட்ஃபோன்களில் மேஜிக் செய்யும். அதேபோல் இசையமைப்பின்போது அவருடன் அமர்ந்தால் இப்போது அதிகாலை வரை இல்லாமல் சீக்கிரமாக முடித்துவிடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக இருவரும் இணைந்து படங்களை கொடுத்து வரும் நிலையில்,ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மணிரத்னம், ரஹ்மான் தனது ஸ்டூடியோவில் அமைதியாக தனது வேலையை பார்த்துக்கொண்டிருப்பார். அதே சமயம் பகலில் இசைமைப்பதை விட இரவில் இசையமைப்பது தான் சரியாக இருக்கும் என்று ரஹ்மான் கூறுவது உண்மைதான். ஆனாலும் இப்போதுதான் அவர் என்னிடம் அன்பாக நடந்துகொண்டு, இரவு 10.30-11 மணிக்கு முன்னதாகவே என்னை அனுப்பி விடுகிறார்.
முன்பு நாங்கள் காலை 5.30 மணி வரை அவரின் ஸ்டூடியோவுக்கு இசை தொடர்பான பணிகளில் இருப்போம். அந்த நேரத்தில் வெளிவருவது சில சமயம் மிகவும் ஆனந்தமாக இருக்கும். அந்த நேரம் தான் அமைதியாகவும் இருக்கும். இதனால் அதிகாலை மூன்று மணி, ஹெட்ஃபோன்களை வைத்துக்கொண்டு வேலை செய்வார். அதனால் நான் அங்கு இருக்கும்போது எதையும் கேட்க முடியாது கடைசியாக அவர் எழுந்து, ஹெட்ஃபோனைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரஹ்மான், “ஆனால் அதுவும் (ஹெட்ஃபோன்களில் வேலை செய்வது) இப்போது நின்று விட்டது. நான் தைரியமாகிவிட்டேன். இசையமைப்பாளர் தனிப்பட்ட முறையில் வேலை செய்ய வேண்டும் என்ற தனது வற்புறுத்தல் தனது ஆரம்ப நாட்களில் விளம்பரம் காரணமாக அவ்வாறு இருந்தது. “சில நேரங்களில் மக்கள் உடனடியாக செயல்படுவதை நான் விரும்பவில்லை. ஹெட்ஃபோன்களுடன் வேலை செய்யும் பழக்கம் விளம்பரம் காரணமாக வந்தது.
இளம் காப்பிரைட்டர்கள் அனைவரும் வருவார்கள், நீங்கள் மூன்று குறிப்புகளை மட்டும் வாசிப்பீர்கள், அதை கேட்டுவிட்டு, ‘ஓ, அது ஜன கன மன போல! இருக்கிறது என்று சொல்வார்கள். அதனால், அந்த ஹெட்ஃபோனுடனான நெருக்கத்தை, தாயின் கருவறை போல பழகிவிட்டேன். எனவே நான் ஏதாவது ஒன்றை உருவாக்கி, பின்னர் ரசிகர்களுக்கு கொடுக்கிறேன், என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil