அசுரன் கதையைக் கேட்டதுமே ‘எஸ்’ சொல்லிட்டேன் – மனம் திறக்கும் மஞ்சு வாரியர்

Asuran: தைரியம் என்பது சத்தமாக பேசுவது என்பதல்ல, அது தான் பச்சையம்மாவின் மிகப்பெரிய பலம்.

Manju Warrier
Manju Warrier

எஸ்.சுபகீர்த்தனா

Manju Warrier : ”அசுரன்” திரைப்படம் வெளியான மூன்று வாரங்களுக்குள் ரூ .100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மஞ்சு வாரியரை சந்தித்தோம்.

சாக்‌ஷயம் (1995) மலையாளத்தில் உங்களது முதல் படம். தமிழில் அறிமுகமாக 24 ஆண்டுகள் ஆகியிருக்கிறதே

எல்லாவற்றிற்கும் சரியான நேரம் வர வேண்டும். கடந்த காலங்களில் எனக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்களிடமிருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் பல காரணங்களால் அவற்றில் பணியாற்ற முடியவில்லை. அதெல்லாம் அசுரனுக்காக தான் என நான் நினைக்கிறேன். தனுஷும் நானும் 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறோம். பல ஸ்கிரிப்ட்களைப் பற்றி விவாதித்திருக்கிறோம். ஆனால் இந்த முறை தான் எல்லாம் சரியாக அமைந்தது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. கேரளாவில் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அசுரன் எனது தொழில் வாழ்க்கையில் சிறப்பான படம்.

பச்சையம்மாவின் தைரியம் அனைவருக்கும் பிடித்திருந்தது. வெற்றிமாறன் இந்த ஸ்கிரிப்டை விவரிக்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? 

நன்றி. இது ஒரு கேரக்டர் ரோல். தைரியம் என்பது சத்தமாக பேசுவது என்பதல்ல, அது தான் பச்சையம்மாவின் மிகப்பெரிய பலம். இந்த கிரெடிட் எல்லாம் வெற்றி சாரையே சேரும். ஏனெனில் அவரது படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் நான் பார்த்து, வியந்திருக்கிறேன்.

நேச்சுரலி, கேட்டதுமே அசுரனுக்கு இன்ஸ்டண்டாக ‘எஸ்’ சொன்னேன். இருப்பினும் கதாபாத்திரம் என் தோலில் இறங்க சிறிது நேரம் பிடித்தது. செட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் வெற்றி சாரும், தனுஷும் என்னை கம்ஃபர்டபிளாக உணரச் செய்தனர்.

பச்சையம்மா எனக்கு அறிமுகமானபோது, உணர்ச்சிகளின் வரம்பைக் கடந்தேன். உற்சாகமாகவும், பயமாகவும் இருந்தது. இது ஒரு தீவிரமான பாத்திரம், கோவில்பட்டியில் பெண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், பேசுகிறார்கள், புடவை கட்டுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. முதல் படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு ஏற்பட்ட அதே பதட்டத்தை அனுபவித்தேன்.

ரொம்ப சாதாரணமாக இருக்கிறீர்களே?

அப்படி இல்லை. முதலில், என்னை நான் ஒரு நல்ல நடிகை என நினைப்பதில்லை. எனது வேடங்களில் ஒருபோதும் எனக்கு திருப்தி ஏற்படாது. இதை நான் பல நேர்காணல்களிலும் கூறியுள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் எனது படங்களைப் பார்க்கும்போது, இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என நினைப்பேன். விஷயம் என்னவென்றால், என்னை நானே அளவுக்கு அதிகமாக விமர்சித்துக் கொள்கிறேன். அது தான் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. எனது நடிப்புத் திறனில் ஒருபோதும் திருப்தி கிடைக்காது. உங்களைப் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருப்பது நல்லது. (புன்னகைக்கிறார்)

அசுரானில் மூன்று குழந்தைகளின் தாயாக நடிப்பதை நினைத்து பயந்தீர்களா?

இல்லவே இல்லை. இது ஒரு சக்தி வாய்ந்த பாத்திரம். நான் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் மலையாளத்தில் நடித்ததில்லை. அதுதான் என்னை அசுரனில் நடிக்க வைத்தது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது, வெற்றிமாறன் இயக்குகிறார் என்றதும், எனது இயக்குநர் நண்பர்கள் நிறைய பேருக்கு ஆர்வம் அதிகமானது. மலையாள சினிமா அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தனக்கு என்ன வேண்டுமென அவருக்கு நன்றாக தெரியும்.

நீங்கள் நாகர்கோயிலில் வளர்ந்திருந்தாலும், திருநெல்வேலி பேச்சுவழக்கை சரியாக பிடிப்பதில் எப்படி பணியாற்றினீர்கள்?

நான் குடும்பத்துடன் கேரளாவுக்கு இடம்பெயர்ந்த போது எனக்கு 10 வயது. அதுவரை, நான் இங்கே தான் இருந்தேன். குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது நாகர்கோயிலுக்குச் சென்று வருகிறேன். அது எனது குழந்தைப்பருவத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக நான் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் படங்களையும், பாடல்களையும் பார்த்தும், கேட்டும் கொண்டு தான் இருக்கிறேன். படத்தில் டப்பிங் சவாலானது. என் பாத்திரத்திற்காக நான் தான் டப் செய்ய வேண்டும் என்று வெற்றி சார் சொல்லிவிட்டார். எனக்கு மொழி பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டார். ஸ்கிரிப்ட்டில் இதற்கு முன்பு நான் கேள்விப்படாத வார்த்தைகள் நிறைய இருந்தன.

எனக்கு தமிழில் அசுரன் ஸ்கிரிப்டைக் கொடுத்தார்கள். நல்ல வேளை, எனக்கு தமிழில் படிக்கவும், எழுதவும் தெரியும். நான் ஷூட்டிங்கில் துல்லியமாக பேச வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் டப்பிங்கின் போது அதை சரிசெய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். (சிரிக்கிறார்)

எல்லாம் என் முயற்சிக்கு மதிப்பளித்திருக்கிறது. முதல் ஐந்து நாட்கள் கடினமாக இருந்தன. பள்ளியில் இருக்கும் குழந்தையைப் போல உணர்ந்தேன். புதிய சூழலும், தொழில்நுட்ப கலைஞர்களும் பழக கொஞ்சம் டைம் எடுத்தது. நான் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் யோசித்து சிக்கல் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் வெற்றி சாரும், தனுஷும் எனக்கும் ஆதரவாக இருந்தனர். எனது கதாபாத்திரத்துக்குள் நுழைந்ததும்,  நான் அந்த ப்ராசஸை ரசித்தேன். வசனகர்த்தா சுகா, வெற்றி சாருக்கு இணையாக எனக்கு உதவியாக இருந்தார். அவர்கள் இருவரும் நான் பேசிய வரிகளை சரிபார்த்தார்கள்.

அசுரன் முதல் நாள் முதல் காட்சி பார்த்தீர்களா?

துரதிர்ஷ்டவசமாக, பார்க்க முடியவில்லை. படம் வெளியாகும் போது நான் கோட்டயத்தில் இருந்தேன். அப்போது ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படத்தை யூனிட்டாக பார்க்க விரும்பினோம். ஆனால், தியேட்டர் கிடைக்கவில்லை. அசுரன் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதில், நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், எனது பாத்திரத்தை மக்கள் பாராட்டினால், அதற்கு காரணம் இயக்குனர் தான். நடிகர்கள் அவர் சொல்லும் படி தான் செயல்படுகிறார்கள். ஆனால், இயக்கம் அப்படியல்ல.

இப்போது உங்களிடம் பேக் டூ பேக் படங்கள் உள்ளன, நடனம் பின்னிருக்கைக்கு சென்று விட்டதா?

இல்லை. எந்த நாளிலும் நடனம் தான் ஃபர்ஸ்ட். அதன் மீது நான் பேரார்வம் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நடன பயிற்சி செய்கிறேன், ஓரிரு நடன படங்களிலும் பணியாற்ற விரும்புகிறேன்.

இனிமேல் அதிகமான தமிழ் படங்களில் உங்களை எதிர்பார்க்கலாமா?

நிச்சயமாக (புன்னகைக்கிறார்).

கனவு கதாபாத்திரம்? 

நான் இதுவரை செய்யாத ஒவ்வொரு பாத்திரமும் எனக்குக் கனவு பாத்திரம் தான்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Manju warrier says asuran was an instant yes dhanush vetrimaaran

Next Story
பாலிவுட்டின் அடுத்த பிரேக் அப்: நேரமில்லாதது தான் காரணமா?Sara Ali Khan - Kartik Aryan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com