தமிழ் சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையில், சினிமா வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதில் இயக்குநர் பாரதிராஜா, கோபத்தில் இயக்குநர் பாக்யராஜை விரட்டி அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கினை மாற்றிய இயக்குநர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளனர். அதில் இயக்குநர் பாராதிராஜாவின் பங்கு மிகவும் முக்கியமானது. மண் வாசத்தோடு படங்கள் எடுக்க அச்சாரம் இட்டவர் பாரதி ராஜா.
இவரது படங்கள் இன்றைக்கும் கிளாசிக் லிஸ்ட்டில் இருக்கின்றன. இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தமிழ் சினிமாவின் அரியாசணத்தில் அமராமல் இல்லை. அப்படி இவரிடத்தில் உதவி இயக்குநராக இருந்தவர்களில் இயக்குநர் பாக்யராஜ் முக்கியமானவர்.
ஒருமுறை இருவருக்கும் எதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட, பாக்யராஜை விரட்டி அடித்துள்ளார் பாரதி ராஜா. அதன் பின்னர் இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்துள்ளார் மனோபாலா.
இது தொடர்பாக மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகரான மனோபாலா பேட்டி ஒன்றில் விரிவாகவே பேசியுள்ளார். அதாவது, "பாரதிராஜா சார், புதிதாக புரெடக்ஷன் நிறுவனம் ஆரம்பித்து, படம் பண்ணும் முயற்சியில் இருந்தார். அப்போது என்னை கமல்ஹாசன் அவரிடம் அனுப்பினார். நான் அதிகம் சிகரெட் பிடிப்பவன். சிகரெட் பிடித்துக் கொண்டே, பாரதி ராஜாவைப் பார்த்து, நீங்கள்தான் பாரதி ராஜாவா? என்னை கமல்ஹாசன் அனுப்பினார் எனக் கூறினேன்.
ஒரு அறையில் அவருடன் சிலர் அமர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளார்கள். சிறிது நேரம் கழித்து பாரதி ராஜாவை தனியாக அழைத்து, இந்தக் கதையையா நீங்கள் படம் செய்யப்போகின்றீர்கள் எனக் கேட்டேன்.
அவர் ஆமாம் என்றார். உடனே இந்தப் படம் ஓடாது எனக் கூறிவிட்டேன். உடனே அதிர்ச்சி அடைந்த, பாரதி ராஜா உள்ளே இருப்பவர்கள் யார் எனத் தெரியுமா எனக் கேட்டார்.
உடனே நான், அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நான் அனைத்து மொழிப் படங்களும் பார்கின்றவன். ஹாலிவுட் படங்கள் வரை பார்க்கின்றவன், என்னோட சினிமா அறிவினைப் பயபடுத்திக் கூறுகின்றேன். இந்தப் படம் ஓடாது.
இதுமட்டும் இல்லாமல், உங்களிடம் பாக்யராஜ் என ஒருவர் இருந்தார் அல்லவா? அவர் எங்கே எனக் கேட்டேன். உடனே அவர், ' அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஆகிவிட்டது, அடித்து விரட்டிவிட்டேன் எனக் கூறினார்.
நான் உடனே, என்ன சார், புதுசா கம்பனி ஆரம்பிக்கும்போது, நல்லா திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ள மாட்டீர்களா? எனக் கேட்டுவிட்டு, பாக்யராஜை அழைத்துவரச் சென்றேன்.
பாக்யராஜ் ஒரு ஹோட்டலில், கதை எழுதிக்கொண்டு இருந்தார். அவரைச் சந்தித்து, பாரதிராஜா சாருடன் வந்து பணியாற்றுங்கள், உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும் எனக் கூறி அழைத்துவந்தேன்.
முதலில் மறுத்த பாக்யராஜ், அதன் பின்னர் கொஞ்சம் பொறுமையாக எடுத்துக் கூறிய பின்னர், புரிந்து கொண்டார்" என்று கூறி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.