தமிழ் சினிமாவில் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் குணச்சித்திர திலகம் மனோரமாவின் நினைவு தினம் இன்று. மனோரோ குறித்த சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஆண்கள் மட்டுமே நடித்து வந்த நிலையில், பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர் நடிகை மனோரமா. நகைச்சுவை கேரக்டரில் தொடர்ந்து நடித்து வந்தாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து முத்திரைப் பதித்தவர் மனோரமா.
/indian-express-tamil/media/post_attachments/qirmENcvo7hvOdp3I5Gw.jpeg)
தமிழ் திரைப்பட ரசிகர்களால் அன்புடன் ஆச்சி என்று அழைக்கப்படும் மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. மனோரமா 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000-த்திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது எனப் பல விருதுகளையும் பெற்றவர்.
மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் மனோரமா. மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நடிகை மனோரமாதான்.
/indian-express-tamil/media/post_attachments/3a3a5a69-d8d.jpg)
நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மனோரமா குணச்சித்திர வேடங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார். குணச்சித்திர வேடங்களில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். குறிப்பாக ’அம்மா’ கதாபாத்திரத்தில் அதிகளவில் நடித்தது இவர் தான். சாதாரண மேடை நாடகத்தில் ஆரம்பித்த இவர் தற்பொழுது பல பெண் கலைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார்.
மனோரமா நினைவு தினமான இன்று, ஃபேஸ்புக் பயனர் சாய்ரா பானு, மனோரமா குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், மனோரமா நடிக்காத கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அது திருநங்கை கதாபாத்திரம். மனோரமாவைப் பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்குத் திருநங்கைகள் வருவார்கள். அப்படி ஒருநாள், சில திருநங்கைகள் மனோரமாவிடம், 'பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தால் அனுதாபப்படுகிறார்கள். ஆனால், எங்களை மட்டும் கேலிப் பொருளாக நினைக்கிறார்கள். நாங்களும் மனிதப் பிறவிகள்தான்' என்று சொல்ல, அந்த நிமிடத்திலிருந்து திருநங்கை கதாபாத்திரம் செய்யப் பெரிதும் விரும்பினார் மனோரமா. 'சவால்' படத்தில் லுங்கி கட்டிக்கொண்டு ஆண் போன்ற கதாபாத்திரத்தைச் செய்திருந்தாலும், ஒரு முழுமையான திருநங்கை கதாபாத்திரம் செய்யவில்லை என்ற ஏக்கம் இறுதிவரை அவருக்கு இருந்தது.
/indian-express-tamil/media/post_attachments/shfCXdBEFvFEN2ApMyaj.jpg)
'சின்னத்தம்பி' படத்தின் க்ளைமாக்ஸில் கைம்பெண் தாய் மனோரமாவின் மீது, மஞ்சள் தண்ணீர் ஊற்றி குங்குமம் வைக்கும் காட்சி எடுக்கும்போது, வழக்கத்தைவிட மிகவும் சீரியஸாக நடித்துக்கொண்டிருந்தார், மனோரமா. 'என்னாச்சு' எனப் படக்குழுவினர் கேட்டபோது, 'ஒண்ணுமில்ல. என் வாழ்க்கைக்கும் இந்தக் காட்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தோணுது' என வேதனையோடு சொன்னார், எனப் பதிவிட்டுள்ளார்.
நிஜ வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து, திரைத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் மனோரமா. நடிக்க ஆரம்பித்தது முதல் இறப்பு வரை சினிமாவில் தொடர்ந்து நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் மனோரமா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“