Advertisment

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்

'எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு' என்று கூறி நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mansoor Ali Khan apology statement  for remarks against actress Trisha Tamil News

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு என அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

Mansoor-ali-khan | trisha | tamil-cinema-news: தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். 

Advertisment

நடவடிக்கை

தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

வழக்கு 

இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மன்சூர் அலிகான் சென்னை, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

மன்னிப்பு

இந்த நிலையில், எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு என்று கூறி நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் கூறியிருப்பது பின்வருமாறு: 

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம், மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு! என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு. விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்துதான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடுதான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10 ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mansoor Ali Khan Tamil Cinema News Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment