திரைப்படங்கள் என்பது மக்கள் குறித்தும், அவர்களின் அரசியல் குறித்தும் பேச வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த முகப்பேரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், 'வீதி தரும் திரை விருது' என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் உட்பட ஏழு இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 15 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக வாழை, கொட்டுக்காளி, தங்கலான், போகும் இடம் வெகு தூரம் இல்லை, வேட்டையன், லப்பர் பந்து, ஜமா, நந்தன், மெய்யழகன், விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் விருதுகளை பெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மாறி செல்வராஜ் மேளம் வாசித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய மாரி செல்வராஜ், "நாம் எடுக்கும் படம் முதலில் மக்களுக்கு பிடிக்க வேண்டும். நமது உணர்வுக்கு, வாழ்வுக்கு, அரசியலுக்கு, எதிர்காலத்துக்கு, எதிர்கால சந்ததி போன்றவற்றுக்காக நாம் எடுக்கும் படம் பேச வேண்டும்.
மற்றபடி அந்த படம் ஓடலாம், ஓடாமல் போகலாம்; பணம் சம்பாதிக்கலாம், சம்பாதிக்காமல் போகலாம். நமது படத்தை உழைக்கக்ம்mகூடிய விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் கொண்டாடும் போதுதான் நமக்கு திருப்தி கிடைக்கும்.
ஒரு படம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்து கொடுத்தாலும் சாதாரண மக்கள் நம் கையை பற்றி கொள்ளும்போது தான் நாம் செய்யும் வேலையை சரியாக செய்கிறோம் என்ற உணர்வு தோன்றும். அந்த வகையில் தெருக்கூத்து கலைஞர்கள் மத்தியில் வாங்கும் இந்த விருதை பெருமையாக எண்ணுகிறேன்" என்று தெரிவித்தார்.