‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு நிழ்ச்சியில், கமல்ஹாசனுக்கு நேராகவே, தேவர் மகன் படத்தை விமர்சித்த நிலையில், கமல்ஹாசன் மாமன்னன் படத்தை பாராட்டியது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல முதல் முயற்சிகளை செய்தவர். பல சாதனைகளைச் செய்தவர். தமிழ் சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள் எல்லோரும் வியந்து பார்க்கப்படுபவர்தான் கமல்ஹாசன். அவர் நடித்த, நாயகன், இந்தியன், மகாநதி, 16 வயதினிலே, குணா, ஆளவந்தான், மைக்கேல் மதன காமராஜ், தசாவதாரம் எல்லாமே சிறந்த படங்கள் என்று இன்றைக்கு ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருடைய தேவர் மகன் படத்தைப் பற்றி கமல்ஹாசன் முகத்துக்கு நேராகவே மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதை தமிழ் திரையுலகம் மிரட்சியாகத்தான் பார்த்தது.
அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் உதயநிதியுடன் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசினார். தேவர் மகனில் வரும் இசக்கிதான் மாமன்னன் என்று பேசினார்.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் மாரி செல்வராஜின் பேச்சு விவாதமானது. அவர் 13 ஆண்டுகளுக்கு முன், இணையத்தில் தேவர் மகன் படத்தை விமர்சித்து கமல்ஹாசனை கடுமையாகச் சாடி எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் மீண்டும் வலம் வந்தது.
கமல்ஹாசன் முன்னிலையிலேயே, அவருடைய முகத்துக்கு நேராகவே அவருடைய தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியது, கமல்ஹாசன் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியபோது என் உடம்பெல்லாம் நடுங்கியது என்றும் வீட்டை விட்டு ஓடிப்போன மகன் திரும்பி வந்து அப்பாவிடம் கோபமாக பேசியது போன்றது தான் அது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியதாவது: “மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ரொம்ப எமோஷனலான தருணம். அவரிடம் நெருக்கமாக பேசியதால் தான் அந்த எமோஷன் வெளிவந்தது. அது கமல் சாருக்கும் தெரியும். 13 வருஷத்துக்கு முன்னர் அப்படி கடிதம் எழுதியது, அந்த சமயத்தில் எனக்கு இருந்த கோபத்தையும், மொழி வாசிப்பையும் வைத்து எழுதப்பட்டது. அதன்பின் மிகப்பெரிய உழைப்பை போட்டு தான் நான் சினிமாவை கற்றிருக்கிறேன்.
கமல் சார் பரியேறும் பெருமாள் பார்த்துட்டு என்னை அழைத்து பாராட்டி இருந்தார். அவர் மாமன்னனும் பார்த்துவிட்டார். அவருடன் அமர்ந்து தான் நானும் படத்தைப் பார்த்தேன். பார்த்து முடித்ததும் என் கையை பிடித்து அவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது என் உடம்பெல்லாம் நடுங்கியது. அது அவருக்கும் தெரியும், மாமன்னன் படத்தை உணரக்கூடியவர்தான் அவர். நான் அந்த விழாவில் பேசிய பின்னர் கமல் சார் பேசுகையில், இது மாரியின் அரசியல் இல்லை, நம் அரசியல் என சொன்னபோது எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்.
மேடையில் பேசும் போது நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அந்த வீடியோ பார்த்தாலே தெரியும், நான் ஏதோ பேச ஆரம்பித்து எதையோ பேசி இருப்பேன். என் எதிரே அமர்ந்திருந்த கமல் சாரை பார்த்து பேசினேன். பேசி முடித்து கீழே வந்ததும் எதுவும் தப்பா பேசிட்டேனா என உதயநிதியிடம் கேட்டேன். அவர் சரியா தான் பேசுனீங்க என்று சொன்னார். வீட்டை விட்டு ஓடிப்போன மகன் திரும்பி வந்து அப்பாவிடம் கோபமாக பேசியது போன்றது தான் அது” என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"