மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ''வாழை" திரைப்படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழைத்தாரை வெட்டி அதை சில கி.மீ தூரம் சுமந்து வந்து லாரியில் ஏற்றுவது தான் அங்குள்ள மக்களின் பிரதான தொழில். பள்ளிக்கூடத்தில் படிக்கும் கதையின் நாயகனான சிவனைந்தனும், அவரது நண்பன் சேகரும் வறுமையின் காரணமாக விடுமுறை நாட்களில் வாழைத்தாரை சுமந்து செல்லும் வேலையை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வாழைத் தார் சுமக்கும் பணியை வேண்டா வெறுப்பாக செய்யும் சிவனைந்தன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு:
சிறுவர்களாக நடித்திருக்கும் பொன்வேல் மற்றும் ராகுல் இருவரின் அசத்தலான நடிப்பும் நம் பள்ளிப்பருவத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது. குறிப்பாக சிவனைந்தனின் (பொன்வேல்) நடிப்புக்கு பல விருதுகள் அவரை தேடி வரும் என்பது உறுதி. இந்த சிறு வயதில் அந்த கனமான கதாபாத்திரத்தின் கலகலப்பையும், ஆழத்தையும், வலியையும் தன் நடிப்பின் வாயிலாக நம்முள் எளிதாக கடத்துகிறார். ஆசிரியையாக நடித்திருக்கும் நிகிலா விமலின் கதாபாத்திரம் நம்மை எளிதாக கவர்கிறது. நம் எல்லோருடைய வாழ்விலும் இதுபோல மனதுக்கு பிடித்த ஒரு டீச்சரை கடந்து வந்திருப்போம். அதை அவருடைய நடிப்பு நமக்கு நினைவூட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது கலையரசனின் நடிப்பு. சிவனைந்தனின் அக்காவாக தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்திருக்கிறார் திவ்யா துரைசாமி. படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இயக்கம் மற்றும் இசை:
தன் சிறுவயதில் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வலிகளை தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு புரியவைப்பதில் வல்லவரான மாரி, இப்படத்தில் சிறுவர்களின் சேட்டைகளை கலகலப்பாகவும், அவர்களின் வறுமையை வலிகளாகவும் நமக்கு கடத்துகிறார். மாரி செல்வராஜின் படங்களிலேயே சிறந்த திரைமொழி கொண்ட படமாக உருவெடுத்துள்ளது வாழை. தன் இளம் வயதில் சந்தித்த கஷ்டங்களையும் சோகங்களையும் அப்படியே இந்த வாழை மூலம் நம் கண்முன் கொண்டு வந்து நம்மை கண்கலங்க வைத்திருக்கிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அட்டகாசமாக அமைந்துள்ளது. குறிப்பாக வாழைத் தோட்டங்களின் அழகையும், அதில் வேலை செய்யும் மக்களின் அழுகையையும் அற்புதமாக தனது கேமரா மூலம் நமக்கு கடத்தியிருக்கிறார்
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் அவருடைய இசை நம் மனதை உலுக்குகிறது.
படம் பற்றிய அலசல்:
ரஜினி மற்றும் கமல் ரசிகர்களாகிய இரண்டு சிறுவர்களின் கலாட்டாக்களும், சிறுவர்களுக்கும் ஆசிரியைக்கும் இடையேயான உறவை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் முதல் பாதியில் ரசிக்க வைக்கிறது. பணம் படைத்த முதலாளிகள், சரியான கூலி கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவது போன்ற காட்சிகளை சமகாலத்திலும் நம்மால் கனெக்ட் செய்ய முடிகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்கும் கலையரசனின் கதாபாத்திரம் மூலம், மாரி தனது கம்யூனிச சித்தாந்தங்களை வசனங்களாக தெறிக்கவிட்டிருக்கும் விதம் வரவேற்பை பெறுகிறது.
இடைவேளைக்கு பின் முழு மாரி செல்வராஜின் படமாக மாறுகிறது வாழை. வலிகள் நிறைந்த காட்சிகளும், அழுகைகளும், சோகங்களும் நம் மனதை ஆழமாக பாதிக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை கலங்கவைத்து, கண்களை குளமாக்கி வெளியே அனுப்புகிறார் மாரி செல்வராஜ். படம் முடிந்தும் அதன் தாக்கம் குறைய பல மணிநேரம் ஆகிறது.
படத்தின் பிளஸ்:
◙ நடிகர்களின் எதார்த்த நடிப்பு
◙ கலகலப்பான முதல் பாதி
◙ வலிகள் நிறைந்த இரண்டாம் பாதி
◙ மாரியின் இயக்கம்
◙ வசனங்கள்
◙ பின்னணி இசை
◙ ஒளிப்பதிவு
படத்தின் மைனஸ்:
◙ எளிதாக யூகிக்கக்கூடிய காட்சிகள்
பெரும்பாலான மக்களுக்கு இப்படம் பிடித்தாலும், ஒரு சில மக்களுக்கு சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்தலாம். மொத்தத்தில், மாரி செல்வராஜின் மற்றொரு மாபெரும் படைப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளது "வாழை”
விமர்சனம் - நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.