Vaathi Coming : ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘அண்ணாத்த ஆடுறார்’ என்ற பாடலுக்கு ட்ரெட் மில்லில் நடனமாடி புகழ்பெற்ற நடிகர் அஸ்வின், தற்போது விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலுக்கு ட்ரெட் மில்லில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கிய, ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், கடந்த வாரம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அண்ணாத்த ஆடுறார்' என்ற பாடலுக்கு ‘உலக நாயகன்' கமல் ஹாசனைப் போலவே ட்ரெட்மில்லில் நடனமாடி சமூக வலைதளங்களில் வைரலானார். உச்சகட்டமாக, ட்விட்டரில் கமல் ஹாசனின் வாழ்த்துகளையும் பெற்றார்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 46-வது பிறந்தநாளை தளபதி விஜய் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஒரு சிலர் தனித்துவமான வாழ்த்துகளால் தங்களது அன்பை வெளிக்காட்டினர். நடிகை கீர்த்தி சுரேஷ், வயலின் மூலம் ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வாசித்து, விஜய்க்கு ட்ரிப்யூட் செய்தார்.
இதற்கிடையே ஜூன் 21-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அஸ்வின், ட்ரெட்மில்லில் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது நேற்று (ஜூன் 22) விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
’அண்ணாத்த ஆடுறார்’ பாடல் நடனத்தை வைரலாக்கிய நெட்டிசன்களுக்கு தனது நன்றியை தெரிவித்த அஸ்வின், ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் ரசிகர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க நடனமாடியதாக தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”