Thalaivar 168 Update: கடந்த பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.
இதில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த். தர்பார் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பப்பர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி. தலைவர் 168 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில், டி.இமான் இசையமைப்பாளராகவும், சூரி காமெடியனாகவும் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி இருந்தது. இதற்கிடையே நடிகை கீர்த்தி சுரேஷ், தலைவர் 168 படத்தில் இணைவதாக சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ். ஆக, ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆரவாரமாக இருந்த நேரத்தில், மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
அதில், தலைவர் 168 படத்தில் மீனாவும், குஷ்புவும் நடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ரஜினி – மீனா, ரஜினி – குஷ்பு ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
தற்போது இவர்கள் இருவருமே ஒரே படத்தில் ரஜினியுடன் இணைந்திருப்பதால், ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.