ஆதவன்
இசையமைப்பாளராகப் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி, இயக்குநராகவும் நடிகராகவும் களமிறங்கியிருக்கும் படம்தான் ‘மீசைய முறுக்கு’.
ஆதி (ஹிப் ஹாப் ஆதி) நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பையன். இசை என்றால் உயிர். அவனுக்கு முரட்டுத்தனமான ஒரு தம்பி. அப்பாவுக்கு (விவேக்) தன் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் எனப்து ஆசை. அப்பாவின் ஆசைக்காகப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாலும் ஆதிக்கு இசையில்தான் தீவிரமான ஆசை. இடையில், பள்ளிப் பருவத் தோழி நிலாவின் (ஆத்மிகா) மீது காதல். அவளும் அதே கல்லூரியில் வேறு துறையில் படிக்கிறாள். அவள் குடும்பத்தினர் சாதி காரணமாகக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். கனவைத் தேடி யதார்த்தத்தைத் தொலைத்துவிடாதே என்கிறார் அப்பா. ஆதி தன் கனவிலும் காதலிலும் வென்றானா என்பதே கதை.
'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு' என்னும் தன்னம்பிக்கை மந்திரம்தான் படத்தின் அடிநாதம். சண்டை, காதல், லட்சியம் என எல்லாவற்றிலும் இதை வலுவாகப் பிரதிபலித்து ஸ்கோர் செய்கிறார் ஆதி.
காட்சிகளில் சுவாரஸ்யம் காட்டுகிறார் இயக்குநர் ஆதி. பள்ளிப் பருவத்துக் காட்சிகள், கல்லூரியில் ராகிங்கைச் சமாளிப்பது, காதலியிடம் கடலை போடுவது, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடுவது, சண்டை என்றால் பம்மினாலும் ஒரு கட்டத்தில் சீறி அடிப்பது என்று காட்சிகள் இளமைத் துள்ளலுடன் நகர்கின்றன. கனவைப் பின்தொடரப் பாடுபடுவதற்கும் படத்தில் கணிசமான இடம் உண்டு.
கதை என்று எதுவும் இல்லை. திரைக்கதையிலும் புதுமையாக எதுவும் இல்லை. காதல், செண்டிமெண்ட் ஆகியவை பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன விதத்திலேயே இந்தப் படத்திலும் தலை காட்டுகின்றன. இளமைத் துள்ளலும் இசையும் நகைச்சுவையும்தான் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.
கல்லூரியில் நடக்கும் இளமைச் சேட்டைகள் சுவாரஸ்யமானவை. சீனியர் – ஜூனியர் மோதல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. நிலாவைக் கண்காணிக்கும் அவளுடைய அக்காவை மீறிக் கல்லூரியில் ஆதியும் நிலாவும் சந்தித்துக்கொள்ளும் காட்சி அட்டகாசம். சீனியர் சுதாகர் பாத்திரமும் அவர் பெயரைச் சொல்லி நடக்கும் ரகளைகளும் அருமை.
நடனம், பாட்டு, சண்டை என நடிகர் ஆதி கவர்கிறார். ஆனால், கதை, திரைக்கதை, பாத்திர வார்ப்பு ஆகியவற்றில் இயக்குநர் ஆதி கவரவில்லை. வாழ்க்கையின் யதார்த்தம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வசனங்களில் எழுத்தாளர் ஆதி பிரகாசிக்கிறார்.
விவேக், காமெடியில் மட்டுமல்லாமல், சென்டிமென்ட்டிலும் முத்திரை பதிக்கிறார். தமிழுக்கு ஆதரவாக அவர் பேசும் காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள்.
நாயகி ஆத்மிகாவுக்கு வழக்கமான வேடம்தான். அவரும் பதுமைபோல வந்து செல்கிறார்.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு இணையத்தில் தான் வெளியிட்ட ஆல்பத்தையே படத்தில் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும் வெரைட்டி இல்லை.
யுடியூப் நட்சத்திரங்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
பலவீனமான கதை, அதைவிட பலவீனமான திரைக்கதை ஆகியவற்றை மீறி, இளமைத் துள்ளல், நகைச்சுவை, தன்னம்பிக்கை மெசேஜ், ரசிக்கவைக்கும் இசை ஆகியவை படத்தை ஓரளவு தூக்கிப் பிடிக்கின்றன.
படம் முழுவதும் மியூசிக்கல் ஃபீல் கொடுத்திருக்கிறார் ஆதி. சின்னச் சின்ன இடங்களில் மார்டன் மியூசிக்கில் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கும் செந்தில்குமார் மற்றும் கிருதி வாசன், படத்தொகுப்பு செய்திருக்கும் ஃபென்னி ஆலிவர் மூவரும் ‘உள்ளேன் ஐயா’ லெவலில் தங்கள் இருப்பை பதிவுசெய்கிறார்கள்.
இலக்கை விரட்டிப் பிடித்து 'வாடி புள்ள வாடி...' பாடலைப் பாடும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரில் உதாசீனமும், அவமானமும் கலந்திருப்பது படம் பார்க்கும் நமக்கும் ஃபீல் ஆகிறது. வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கியது, அவமானப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது... என தனக்கு நடந்த அனைத்தையும் பதிவு செய்யும் ஆதி, தன் பின்புலத்தை வைத்து கண்ணீர் வரவைக்காமல், 'ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ... முயற்சியைக் கைவிட்டுடாதீங்க!' என ஒருவரி அட்வைஸில் எனர்ஜி ஏற்றுகிறார். இந்த எனர்ஜிக்காகவே 'மீசைய முறுக்கி' ஒரு முறை பார்க்கலாம்!
மதிப்பு: 2.5 / 5
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.