பாபு
நேர்மறையான அம்சங்கள் படத்தில் இருந்தாலும் அந்தப் படங்கள் ஓடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அதேநேரம் எதிர்மறை விமர்சனம் எழுந்தால் எந்தப் படமும் கயிறை அறுத்துக் கொண்டு ஓடும். சமீபத்திய உதாரணம், மெர்சல். டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி இரண்டே வரி வசனம்தான். அதுவும் தப்புதப்பாக. பாஜக வின் எதிர்ப்பால் படம் இந்திய அளவில் ட்ரெண்டடித்து வசூலை அள்ளியது (படத்தின் பட்ஜெட் 139 கோடிகள் என்பதால் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டம் என்பது தனிக்கதை).
மெர்சலை பாஜக வாழவைத்தது என்றால் காலாவை நாம் தமிழர் கட்சி காப்பாற்றும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் திரையுலகில். அப்படி என்ன நடந்தது?
காவிரி போராட்டத்தின் போது, சீமானை கைது செய்ய வந்த போலீஸ்காரர்களை, அதெப்படி எங்க அண்ணன் மேல கைவைக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் அடித்து உதைத்தனர். பத்தோடு பதினொன்றாக கடந்திருக்க வேண்டிய அந்த நிகழ்வு, ரஜினியின் ட்விட்டர் பதிவால் விஸ்வரூபமெடுத்தது. போதாததற்கு, அந்த வீடியோவையும் ரஜினி இணைத்திருந்தார்.
ரஜினியின் தலையீட்டால்தான் குறிப்பிட்டப் பிரச்சனை அனைவர் கவனத்துக்கும் வந்தது. சீமானை உள்ளே தள்ளினால் என்ன என்று ஆட்சியாளர்கள் யோசிக்கும் அளவுக்கு நிலைமை சென்றதும் இதனால்தான் என்கிஜிர்கள் நாம் தமிழர் கட்சியினர். சீமானை கைது செய்யப் போவதாக செய்தி வெளியான போது, நாம் தமிழர் கட்சியினர் ரஜினியை எதிர்த்து கோஷமிட்டனர். 'காலா எப்படி வெளியே வரும்னு பார்த்திடலாம்' என்று அங்கேயே பலர் முண்டாதட்டினர். ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. பிரச்சனை அத்தோடு முடியும் என்று நினைத்தனர். இந்நிலையில், அதே பிரச்சனையை மையப்படுத்தி பாரதிராஜா நேற்று அறிக்கை வெளியிட்டார். எங்களின் காவிரிப் போராட்டம் உங்களுக்கு வன்முறையாகத் தெரிகிறதா என்று முடிந்து போன பிரச்சனையை அவர் மீண்டும் முன்னிறுத்தினார்.
காவிரியில் துரோகமிழைத்த மத்திய, மாநில அரசுகளைவிட்டுவிட்டு, ரஜினியை ஏன் இன்னமும் பிடித்து தொங்குகிறார்கள் என்பது புரியாத புதிர். ரஜினிக்கு எதிராக சீமானை நிறுத்தி சீமான் என்ற டெபாசிட் பெறாத பலூனை ஊதிப்பெரிதாக்க நினைக்கிறார் பாரதிராஜா. காலா வெளியாகும் போது நாம் தமிழர் கட்சியினர் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும் சாத்தியமுள்ளது என்கின்றன தகவல்கள். காலாவை குறி வைத்தால் உடனடியாக தலைப்புச் செய்தியில் இடம் பிடிக்கலாம் என்பது சீமானுக்கு தெரியாததல்ல.
மெர்சலை பாஜக காப்பாற்றியது போல், காலாவை நாம் தமிழர் கட்சியினர் வரலாற்று ஆவணமாக்குகிற அசம்பாவிதத்திற்கு சாத்தியமுள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பரசியலில் விழுந்துவிடாமல் கவனமாக இருக்கவும்.