எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு, தனது முதலமைச்சர் நாற்காலியில் உள்ள 4 கால்களில் ஒரு கால் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் செய்தது என்று கூறினார். ஆம், நடிகர் எம்.ஜி.ஆரை ஏழைப் பங்களானாக, உழைக்கும் மக்களின் தோழனாக, அநீதியை எதிர்க்கும் நாயகனாக மக்கள் மத்தியில் முன்னிறுத்தியது, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற உதவியது எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்கள்தான் என்றால் அது மிகையல்ல.
அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களின் உருவாக்கத்தில் மிகவும் சிரத்தையுடன் இருந்தார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.
அந்த வகையில், எம்.ஜி.ஆர் நடித்து 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தனக்கு திருப்தியாக அமையாததால் 40 முறை மாற்றியிருக்கிறார். எஸ்.பி.பி பாடியும் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர், கடைசியாக அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடியிருகிறார். ஒரு வழியாக எம்.ஜி.ஆர் தான் விரும்பியபடி அந்தப் பாடலைப் போராடி உருவாக்கி இருக்கிறார். அந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அந்த பாடல்தான், ‘தாயில்லாமல் நானில்லை... தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல்.
அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார். ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். இந்த படத்தில் வீரனாக உருவாகும் எம்.ஜி.ஆர் தனது தாயை மீட்பதற்காக செல்கிறார். அப்போது, உனது தாயை மட்டுமல்ல, அடிமைப்பட்டுக் கிடக்கும் நமது நாட்டின் அனைத்து பெண்களையும் மீட்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் தந்தை கூறுவார். எம்.ஜி.ஆர் தனது தாயைப் மீட்க செல்கிறபோது, பார்க்கிற இடமெல்லாம் அவருடைய தாயின் உருவம் தெரியும். இந்த படத்தில், எம்.ஜி.ஆரின் தாயாக பண்டரிபாய் நடித்தார்.
பார்க்கும் இடமெல்லாம் தனது தாயின் உருவத்தைப் பார்க்கும் எம்.ஜி.ஆர் தாயைப் பற்றி பாடும் பாடல்தான் அது. இந்த சூழலுக்கு எத்தனையோ கவிஞர்கள் பாடல் எழுதினாலும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கடைசியாக ஆலங்குடி சோமு எழுதியதுதான் எம்.ஜி.ஆருக்கு திருப்தியாக இருந்தது. பல்லவியே எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பிடித்துப்போனது.
இதையடுத்து, பாடல் பதிவின்போதும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. காரணம், பொதுவாக தாயைப் பற்றிய பாடல் என்றால் அது மெண்மையான பாடல்களாக இருக்கும். ஆனால், இந்த பாடல் ஒரு உச்சஸ்தாயில் அமைந்திருக்கும். இந்த படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த படத்தில், டி.எம். சௌந்தரராஜன் பாட வேண்டிய பாடல் ஏதோ காரணத்தால் அவர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், அந்த பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பி-க்கு அளிக்கப்பட்டது.
அந்த வகையில், இந்தப் பாடலையும் எஸ்.பி.பி-யைப் பாட வைத்துள்ளார். ஆனால், எஸ்.பி.பி மெண்மையான குரல் பாடலுக்கு பொருந்தவில்லை. கடைசியாக டி.எம். சௌந்தரராஜனே பாடியிருக்கிறார். ஆனால், இந்த பாடலுக்கு 2 மடங்கு சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த படத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஆர்.எம். வீரப்பன் தான் தயாரிப்பாளர் என்பதால் சம்பளமும் தாராளமாக தரப்பட்டது. டி.எம்.எஸ் எதிர்பார்த்தபடி பிரமாதமாகப் பாடிவிட்டார். இந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்று காலத்தால் அழியாத பாடல்களின் வரிசையில் இடம்பிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“