பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று அண்ணா தலைமையில் உருவான தி.மு.க-வின் ஆரம்ப கால தலைவர்கள் பலரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கோயிலுக்கு செல்லாதவர்கள், இதனால் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தபோது அவருடைய கடவுள் பக்தியால் கட்சிக்குள் நெருக்கடியை சந்தித்தபோது, அவருக்கு கவிஞர் கண்ணதாசன் சினிமா பாடல் மூலம் உதவிய தகவல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் போராடியவர் தந்தை பெரியார். எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சுரண்டல்களுக்கும் காரணம் மூடநம்பிக்கையும் அதற்கு அடிப்படையாக மதமும் கடவுள் நம்பிக்கையும் இருக்கிறது என்று பெரியார் பிரச்சாரம் செய்தார். “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன்” என்று கூறினார்.
பெரியாரின் இந்த பகுத்தறிவு பேச்சைக் கேட்டு ஒரு தலைமுறையே அவர் பின்னால் அணிவகுத்தது, பெரியார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு அறிஞர் அண்ணா தலைமையில் 1949-ம் ஆண்டு உருவானது. அண்ணாவின் பக்கம் அன்றைய இளம் தலைமுறையே திரண்டது.
அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பெரியாரின் தளபதி என்றாலும் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவருடைய கொள்கையில் சில மாற்றங்களை செய்துகொண்டார். திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து முழங்கிய அண்ணா, மத்திய அரசின் சட்டத்தால், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து முதலமைச்சரானபோது மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.
கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை நடத்தியபோது, பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையார் சிலைக்கு தேங்காயையும் உடைக்க மாட்டேன் என்று கூறினார்.
தி.மு.க-வின் ஆரம்ப கால தலைவர்கள் பலரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் நெடுஞ்செழியன், நாவலர் நெடுஞ்செழியன் என பலரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.
தி.மு.க தனது வளர்ச்சிக்கு மேடைப் பேச்சுக் கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது. அன்றைக்கு எழுத்து, நாடகம், சினிமா போன்ற எல்லா கலைகளையும் தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியது.
அன்றைக்கு சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ் அனுதாபியாக இருந்தாலும் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு தி.மு.க-வில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் வரவு தி.மு.க-வுக்கு மேலும் பலம் சேர்த்தது. அவருடைய சினிமா புகழ் தி.மு.க-வுக்கு உதவியது.
எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இணைந்தாலும் அவர் தன்னை எங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர் என்று வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அதே நேரத்தில், தனது கடவுள் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. தி.மு.க-வில் இருந்தாலும் அவர் கோயிலுக்கு செல்வது சாமி கும்பிடுகிற வழக்கம் இருந்தது.
எம்.ஜி.ஆரின் இந்த கடவுள் பக்தி அன்றைக்கு தி.மு.க-வில் அண்ணாவின் தலைமையில் கடவுள் மறுப்புக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களோடு எம்.ஜி.ஆருக்கு எதிரானவர்களும் இதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். எம்.ஜி.ஆர். மருதமலை கோயிலுக்கு செல்வதும் மூகாம்பிகை கோயிலுக்கு தங்கவால் காணிக்கை அளிப்பதும் என்று கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்படுவது குறித்து குறிப்பிட்டு தி.மு.க-வுக்குள் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். இதில் எம்.ஜி.ஆருக்கு எதிரானவர்களும் சேர்ந்துகொண்டு குரல் எழுப்பினர். இதனால், கட்சிக்குள் நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
தனது கடவுள் பக்தியைக் குறிப்பிட்டு கட்சிக்குள் தனக்கு எதிராகக் குரல் எழுவதைக் கண்டு எம்.ஜி.ஆர் மனம் வருந்தினார். அப்போது எம்.ஜி.ஆர் பணத்தோட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படம் 1963-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு முன்னதாக பணத்தோட்டம் படத்துக்கான பாடல் பதிவு நடந்துகொண்டிருந்தது. பணத்தோட்டம் படத்துக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதினார்.
பணத்தோட்டம் படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஒரு கள்ள நோட்டு அடிக்கும் கும்பல் தவறு செய்துவிட்டு அந்த தவறை எம்.ஜி.ஆர் மீது போடுகிறார்கள். எம்.ஜி.ஆரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் சிறையில் இருந்து தப்பி, வெளியே வந்து அந்த கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். சிறையில் இருந்து தப்பி வந்த எம்.ஜி.ஆர் தனது தாயாரையும் காதலியையும் பார்க்கிறார். தனது தாயே தான் தவறு செய்திருப்பேனோ என்று நம்பும்போது எம்.ஜி.ஆர் வருத்தம் அடைகிறார். இப்படியான ஒரு சூழ்நிலையில், எம்.ஜி.ஆர் மனம் வருந்தி பாடுகிற மாதிரி பணத்தோட்டம் படத்தில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூழ்நிலையை இயக்குனர் கே. சங்கர் விளக்க அதற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதுகிறார்.
அப்போது அங்கே மன வருத்தத்துடன் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த கவிஞர் கண்ணதாசன் என்ன காரணம் என்று கேட்கிறார். அப்போது எம்.ஜி.ஆர் தான் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதால் கட்சிக்குள் தனக்கு எதிராக சொந்த கட்சியினர் குரல் எழுப்பி நெருக்கடி தருவதைக் கூறுகிறார். ஒரு கூட்டம் கட்சிக்குள் தனக்கு எதிராக சதி செய்வதைக் கூறுகிறார்.
அப்போது, எம்.ஜி.ஆர் தனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்கிறார். அதற்கு கண்ணதாசன் என்ன உதவி சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்கிறார். எம்.ஜி.ஆர். கட்சியில் எனக்கு எதிராக சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இந்த பாடல் மூலம் அதில் அளிப்பது போலவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த படத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அதற்கு சரி என்று கூறிய கவிஞர் கண்ணதாசன், இந்த பிரச்னையில் உங்கள் மனநிலை என்ன என்று எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார். எம்.ஜி.ஆர் என்ன நடந்தாலும் நடக்கட்டும். உண்மை எல்லோருக்கும் தெரியும். இந்த கட்சிக்கு என்று ஒரு தலைவர் இருக்கிறார் அவருக்கு தெரியும் என்று கூறுகிறார். இதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன், அப்போது பணத்தோட்டம் படத்துக்காக எழுதிய பாடல்தான், “என்னதான் நடக்குது நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மறவாதே” என்ற பாடலை எழுதினார். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் கட்சியில் எம்.ஜி.ஆருக்கு எதிராக குரல் எழுப்பியவர்களுக்கும் சரியான பதிலடியாக அமைந்தது.
இப்படி, எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தபோது அவருடைய கடவுள் பக்தியால் கட்சிக்குள் நெருக்கடியை சந்தித்தபோது, அவருக்கு கவிஞர் கண்ணதாசன் சினிமா பாடல் மூலம் உதவிய தகவல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. இந்த தகவலை Dura Saravanan G என்ற யூடியூபர் தனது சேனலில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.