மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்படம் நடித்துக்கொண்டிருந்தபோது, சக நடிகர் ஜெய்சங்கர் உடன் சிரித்து பேசியதால் ஜெய்சங்கர் மீது கோபமடைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றதாக நடிகை குட்டிபத்மினி பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
சினிமா தயாரிப்பாளர், நடிகை குட்டி பத்மினி சினிமா துறையினர் சம்பந்தமான சில விவகாரங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், நடிகை குட்டி பத்மினி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் பற்றி கூறிய பகீர் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் குட்டி பத்மினி கூறியிருப்பதாவது: “ராமண்ணா அப்படினு ஒரு டைரக்டருடைய படத்துல, அந்த படத்தின் பெயர் ‘நீ’அதுல ஜெயலலிதா அக்காவும், ஜெய்சங்கர் அங்கிளும் ஒன்னா ஆக்ட் பண்றாங்க. ஜெயலலிதா அக்காவுக்கு யாராவது இங்கிலீஷ் நல்லா பேசுனா ரொம்ப பிடிக்கும். ஜெய்சங்கர் நல்லா பேச, அவங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகுது.
அதன் பிறகு ‘யார் நீ’ என்கிற படத்திலும் தொடர்ந்து நடிக்கிறாங்க. அப்போது அவங்களுக்கு இடையே ஒரு கெமிஸ்ட்ரி. அதாவது ஸ்டுடியோவுல இருக்கும்போது எப்பவுமே ஒரு சேர்ல கால் மேல கால் போட்டு புஸ்தகம் வச்சுக்கிட்டு யாரிடமும் பேசாத அம்மு அக்கா, ஜெய்சங்கர் அங்கிளிடம் மட்டும் அடிக்கடி கலகலனு பேச ஆரம்பிக்கிறாங்க. சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க, அவரும் ஏதாவது பதிலுக்கு பேசுறாரு..
இரண்டு பேருக்கும் அவர்கள் பழகுவதில் ஒரு சந்தோஷம் தெரியுது. இது எப்படியோ கிசுகிசுவாக போய், புரட்சித் தலைவர் அவர்களின் காது வரைக்கும் போய்விடுது. அவ்வளவுதான், ஒரு நாள் அவர் என்ன பண்றார்னா, ஒரு துப்பாக்கியை எடுத்துக்கிட்டு, ஜெய்சங்கர் அங்கிள் ஜெயலலிதா அக்கா வீட்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, துப்பாக்கியை எடுத்துக்கிட்டு சுட வந்துடுறாரு. ஆனால், அந்த வீட்ல அப்ப ஜெய்சங்கர் அங்கிள் அந்த நேரம் நல்ல வேளை இல்லை. இருந்திருந்தால் அன்று ஜெய்சங்கர் அங்கிளை அவர் சுட்டுருந்தாலும் சுட்டுருப்பார்” என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது சக நடிகர் ஜெய்சங்கர் உடன் சிரிச்சு பேசிப் பழகியதால் கோபமடைந்த எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ஜெயலலிதா வீட்டில் இருப்பதாக தகவல் அறிந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெயலலிதா வீட்டுகு சென்றார் என்றும் அப்போது ஜெய்சங்கர் அங்கே இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் அவரை சுட்டிருந்தாலும் சுட்டிருப்பார் என்று நடிகை குட்டி பத்மினி கூறியிருப்பது திரைத் துறையிலும் அரசியலிலும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குட்டி பத்மினியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"