எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கின்றனர். அந்த அளவிற்கு வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை எம்.ஜி.ஆர் பாடல்கள் கொண்டிருந்தன.
இவை கவிஞர்களால் எழுதப்பட்டாலும், அதில் இருக்கும் கருத்துகளை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டால் தான் அவை திரைப்படத்தில் இடம்பெறும். இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார். தனது ரசிகர்களும் சரி, திரைப்படம் பார்ப்பவர்களும் சரி, ஒருவரை கூட தவறான கருத்துகள் சென்றடைந்து விடக் கூடாது என்ற கொள்கையை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
இதற்கு சான்றாக கவிஞர் மருதகாசியுடன் எம்.ஜி.ஆருக்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டது. நினைத்ததை முடிப்பவன் என்ற திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக, நீண்ட நாள்களுக்கு பிறகு கவிஞர் மருதகாசியை எம்.ஜி.ஆர் அழைத்து வந்தார். அதன்படி, இப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்' என்ற பாடல் மருதகாசி எழுதியது தான்.
இப்பாடலில், 'பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு, தன் வழியே போகிறவர் போகட்டுமே' என மருதகாசி எழுதியிருந்தார். இந்த வரிகளைக் கண்ட எம்.ஜி.ஆர் மருதகாசியை அழைத்து பேசினார். அப்போது, "தன் வழியே ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது?" என்றும், "அது நல்ல வழியாக இருந்தால், ஏன் தன் வழியில் போகக் கூடாது?" என்றும் எம்.ஜி.ஆர் கேள்வி எழுப்பினார். எனவே, இந்த வரிகளை மாற்றி விடுமாறு மருதகாசியிடம் எம்.ஜி.ஆர் வலியுறுத்தியுள்ளார்.
இதைக் கேட்ட மருதகாசியும், எம்.ஜி.ஆரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த வரிகளை உடனடியாக மாற்றிவிட்டார். அதனடிப்படையில், 'பொன்பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு, கண் மூடிப் போகிறவர் போகட்டுமே' என வரிகள் மாற்றப்பட்டன. இதன் மூலம் எம்.ஜி.ஆரே சென்சார் போன்று செயல்பட்டவர் என நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“