தமிழ்நாட்டில் சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிகரமாக உச்சத்தைத் தொட்டவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அவருடைய பிம்பம் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் தனது படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்தார். அதன் படாடல் வரிகள், இசை எல்லாவற்றையும் தனது ரசிகர்கள் என்ன விரும்புவார்களோ அதையே தேர்வு செய்தார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு, ஒரு பேச்சில், இன்று நான் அமர்ந்திருக்கும் இந்த முதல்வர் நாற்காலியின் 4 கால்களில் ஒன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் செய்தது என்று கூறினார்.
எம்.ஜி.ஆர் தனது படத்தில் இடம்பெறும் பாடல் கருத்துள்ளவையாகவும் மக்கள் விரும்பும்படியகாவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். எம்.ஜி.ஆர் படங்கள் கருத்து சொல்லும் விதமாகவும் அறிவுரை கூறும் விதமாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் விதமாக குழந்தைகளை ஈர்க்கும்படியான பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
திருடாதே பாப்பா பாப்பா, சின்னப் பயலே சினப் பயலே, சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உள்ளிட்ட பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வரிசையில், குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லக்கூடிய எம்.ஜி.ஆர் படத்தின் ஒரு அழகான பாடல் ஒன்றில், ஒரு சிக்கல் வந்தது. அதை சரி செய்ய எம்.ஜி.ஆர் என்ன செய்தார் என்பதை யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
‘பெற்றல்தான் பிள்ளையா?’ ஒரு வித்தியாசமான திரைப்படம், இந்த படத்தின் கதை சிவாஜி கணேசனுக்கு எழுதப்பட்டது, ஆனால், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டியதாக இருந்தது. இந்த படத்தில், ஒரு ஆதரவற்ற குழந்தையை ஒரு திருமணமாகதா இளைஞர் எடுத்து அன்பாக வளர்ப்பதுதான் கதை. இந்த படத்தில் வருகிற ஒரு பாடல்தான் சிக்கலுக்குள்ளானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர் எம்.ஸ்.விஸ்வநாதன், பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த படத்தில் இடம்பெற்ற ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி’ என்று ரொம்ப அழகாக எழுதியிருப்பார்.
இந்த படத்தில் கவிஞர் வாலி 4 சரணங்களை எழுதியிருப்பார். இந்த பாடலில், எம்.எஸ். விஸ்வநாதன் 4 இசைக் கருவிகளைப் பிரதானமாகப் பயன்படுத்தியிருப்பார். 1 அக்காடியன், 2 ஸ்டிங்ஸ், 3 ஷெனாய் அழகாக பயன்படுத்தி இருக்கிறார்.
நல்ல கருத்துகளைக் கொண்ட இந்த பாடல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் ஈர்த்தது.
இந்த பாடலில் 4-வது சரணத்தில் குழந்தைக்கு தலைவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக இருக்கும். அதாவது, “அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல், அன்புக்கு இணங்கு வள்ளலாரைப் போல், கவிதைகள் வழங்கு பாரதியைப் போல், மேடையில் முழங்கு திரு.வி.க போல்” என்று இருக்கும். ஆனால், இந்த இடத்தில், மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாவைப் போல் என்றுதான் கவிஞர் வாலி முதலில் எழுதியிருக்கிறார்.
இந்த வரிகள்தான் சென்சார் போர்டு கத்தரியில் சிக்கியிருக்கிறது. ஏனென்றால், அது 1966 காலகட்டம், அப்போது அறிஞர் அண்ணா முதலமைச்சராகவில்லை. அண்ணா மிகப் பெரும் புகழுடன் ஒரு மாபெரும் தலைவராக உருவாகி இருந்தார். அதனால், சென்சார் போர்டு இந்த பாடலை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்த பாடல் ஒலிப்பதிவில் முதலில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் வந்தபோது, பாடலில் எதுக்கு அண்ணா பெயர் போடுகிறீர்கள் என்று சென்சார் போர்டு தடை போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர் சென்சார் போர்டு இடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறார். ஆனால், சென்சார் போர்டு அண்ணா பெயர் இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்துள்ளது.
வேறு வழியில்லாததால், எம்.ஜி.ஆர் ஒரு மாற்றத்தை செய்கிறார். அதில், அந்த கால கட்டத்தில் மேடைப் பேச்சில் அண்ணாவைப் போல், அற்புதமாகப் பேசக் கூடியவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க என்கிற திரு வி. கல்யாணசுந்தரனார். ரொம்ப சரியாக, மேடையில் முழங்கு திரு. வி.க போல் என்று பாடல் வரியில் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த பாடலை நன்றாக கூர்ந்து கவனிப்பவர்கள், அந்த இடத்தில் மட்டும் ஒரு கட் இருக்கும். ஏனென்றால், அந்த காலத்தில் டிராக் சிஸ்டம் கிடையாது. அப்போது பஞ்ச் பண்ணுவது என்பதுதான் இருந்தது. மறுபடியும் டி.எம்.எஸ்-ஐ பாட வைத்து அதை அந்த இடத்தில் சேர்த்துவிட்டார்கள். அதற்கு பிறகு, அந்த பாடலில் மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்று இருக்கும்.
இப்போதும் நீங்கள் பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘நல்ல நல்ல பிள்ளைகலை நம்பி’ பாடல் வீடியோவைப் பாருங்கள், மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்ற இடத்தில் மட்டும் எம்.ஜி.ஆர் வாய் அசைவு பொருந்தாது. ஏனென்றால், அந்த பாடல் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாவைப் போல் என்று வாய் அசைத்து பாடியிருப்பார்.
இந்த படத்தில் பாடல் வரியில் பெயர் மாற்றப்பட்டாலும், மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்ற வரிக்கும் ரசிகர்களின் கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது. இதற்கு ஏன், கைத் தட்டுகிறார்கள் என்று கேட்கலாம், ஆனால், அந்த பாடல் பல பேருக்கு மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்பதற்கு பதிலாக மேடையில் முழங்கு தி.மு.க போல் என்று கேட்டிருக்கிறது. அண்ணாவும் தி.மு.க-வும் ஒன்னுதானே என்று ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.
இப்படி எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாடல் சென்சார் கத்தரியில் சிக்கியதையும் அதில் தலைவர் பெயர் மாறிய சுவாரசியமான பின்னணியையும் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.