தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பிற்கு உரிய அனுமதி பெறாமலும்,
நீர் நிலைகளை சேதப்படுத்தி படம்பிடிப்பு நடத்தியதாக அண்மையில் சமூகவலைதளங்களில் செய்தி பரவி குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அனுமதி பெற்று படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், நீர் நிலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
உறுதி அளித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே கடந்த சில மாதங்களாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பிற்காக அங்குள்ள நீர்நிலைகளை சேதப்படுத்தியும், வனத் பகுதிக்கு அருகில் அதிக சப்தத்துடன் குண்டு வெடிப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் படக் குழுவினர் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட குண்டு வெடிப்பது தொடர்பான காட்சிகள் வைரலாகி குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால், தென்காசி ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் படப்பிடிப்புக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் மாவட்ட நிர்வாகம் அடுத்த நாளே அனுமதி தர படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தநிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. யார் இந்த அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், தாமிரபரணி நதியைப் பாதுகாக்க திட்டம் தயார் செய்யப்பட உள்ளது” என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“