28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் 2024-ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியை பிரபல தொகுப்பாளரும் பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்க உள்ளார்.
உலகளவில் 1951-ம் ஆண்டு முதல் உலக அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் போட்டி லண்டனில் நடைபெற்றது. 1988-ம் ஆண்டு வரை லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி 1989-ல் ஹாங்காங்கிலும், 1990-ம் ஆண்டு லண்டன், 91-ல் அட்லாண்டா, உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது. இதில் 1994-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றிருந்தார்.
தொடர்ந்து 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில், கிரீக் நாட்டை சேர்ந்த பெண் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். 1996-ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவில் உலக அழகிப்போட்டி நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மார்ச் 9 (இன்று) நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
மும்பையில் நடைபெறும் இந்த 71வது உலக அழகிப்போட்டி, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியை, இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனராக கரண் ஜோகர், 2013-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேகன் யங்குடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். கரண் ஜோகர் 2006-ம் ஆண்டு ஜூரி உறுப்பினராக இருந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் உலக அழகி மேடைக்கு திரும்பியுள்ளார்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உலக அழகிப்போட்டி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் நடைபெற உள்ளது. ஃபெமினா மிஸ் இந்தியா 2022 வெற்றியாளரான சினி ஷெட்டி, மிஸ் வேர்ல்ட் 2024 போட்டியில் இந்தியாவின் பெருமைமிக்க பிரதிநிதியாக பங்கேற்க உள்ளார். தனது நட்சத்திர சாதனைகள் மற்றும் கணக்கியல் மற்றும் நிதியியல் பட்டம் பெற்றுள்ள, 22 வயதான அவர் ஏற்கனவே போட்டியின் கலாச்சார சுற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் இந்த உலக அழகிப்போட்டியில் இறுதிச்சுற்றை, சோனிலிவில் மாலை 7:30 மணிக்குத் நேரலையில் பார்க்கலாம். கூடுதலாக, இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வ மிஸ் வேர்ல்ட் வலைத்தளமான www.missworld.com இல் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 140 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால், உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“