Mookuthi Amman Review Tamil Nayanthara RJ Balaji : 'மூக்குத்தி அம்மன்' என டைட்டில் வெளியானதிலிருந்து, 90-களில் வெளியான அம்மன் திரைப்படங்களைப் போல் இருக்குமா? அல்லது ஆர்.ஜெ.பாலாஜியின் நையாண்டி கலந்த காமெடி படமாக இருக்குமா? என்கிற விவாதங்கள்தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் போய்க்கொண்டிருந்தன. ப்ரோமோ வெளியானதிலிருந்து, நவீனக் காலத்துக்கு ஏற்ற ஏராளமான VFX-உடன் இந்தக் காலத்துக் கடவுள் நம்பிக்கையும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்களும் கான்செப்ட் போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் தோன்றியது. அனைவரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா ஓடிடி தளத்தில் இந்த வருடத் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம்! விவாதிப்போம்.
'பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்திடும்' போன்ற அச்சுறுத்தல்களோ, தான் வைத்திருக்கும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்து ஹீரோயினைக் காப்பாற்றி இளைப்பாறும் தேய்ந்துபோன கதைக்களமோ இந்த பக்தி படத்தில் இல்லை. மக்கள் தங்களின் மனக்குறைகளை வெளியேற்றும் கோவில்களைச் சிலர் தங்களின் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் யுத்திகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது இந்தப் படம். எவ்வளவுதான் உருகி உருகிக் கும்பிட்டாலும், தெய்வத்தால் நேரடியாகக் களமிறங்கி எந்த உதவியும் செய்ய முடியாது என்பதையும் கடவுளின் பெயரால் ஏமாற்றும் சாமியார்களின் சதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது மூக்குத்தி அம்மன்.
கதையின் நாயகன் பெயர் ஏங்கெல்ஸ் ராமசாமி (ஆர்.ஜெ.பாலாஜி). அதாவது உலகின் இரண்டு முன்னணி பகுத்தறிவு சிந்தனையாளர்களான பிரீட்ரிக் ஏங்கெல்ஸ் மற்றும் ஈ.வெ.ராமசாமி ஆகியோரின் பெயர்களை இணைத்துச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், நம் ஊரில்தான் பெரும்பாலானவர்களின் பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இருக்காதே. அதேபோலத்தான் நம்முடைய ஹீரோவும். சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை அதிகம் நிறைந்திருக்கும் நபர். கடவுளையே நம்பிக்கொண்டிருக்கும் பாலாஜி, அவர்மீது நம்பிக்கையிழந்து காணப்படுகிறார். இந்நிலையில், ஓர் சந்தர்ப்பத்தில் பாலாஜி முன் தோன்றும் மூக்குத்தி அம்மன் (நயன்தாரா), தன்னுடைய பாழடைந்த கோவிலைத் திருப்பதி கோவில் போலப் பிரபலமாக்குமாறு கேட்டுக்கொள்வதைப் போலக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். கடவுளின் நிலைப்பாட்டை யார் உயர்த்துகிறார்கள் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
தொலைதூர கிராமத்தில் நிருபராக பணிபுரியும் பாலாஜி, சாமியார் வேடத்தில் மக்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டும் பகவதி பாபாவின் (அஜய் கோஷ்) திருவிளையாடலை தன் தாய், தாத்தா மற்றும் மூன்று சகோதரிகளுடன் வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில் இறங்குகிறார். இந்த முயற்சியில் பாலாஜி வெற்றிபெறுகிறாரா, இதற்கிடையில் அம்மனின் பங்களிப்பு என்ன என்பதுதான் மீதி கதை.
சுவாரசியமான கதைக்களம் என்றாலும், ஆங்காங்கே பல கேள்விகள் எழாமலில்லை. உதாரணத்திற்கு, பாலாஜியின் தாத்தாவாக வரும் மௌலி கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர் எனப்படுகிறது. மூக்குத்தி அம்மனோடு சேர்ந்து பாபாவை வீழ்த்தும் பணியில் இருக்கும்போது, அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல, கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் பாலாஜியின் மூன்றாவது சகோதரி அவ்வப்போது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதுபோல காட்டப்படுகிறது. அவர்கள் கண்முன் அம்மன் தோன்றியபின் 'வேண்டாமிருதம்' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த மூன்றாவது தங்கையின் மனநிலை என்ன என்பதையும் தெளிவாகச் சொல்லவில்லை. இதைப் பற்றி இயக்குநர்களான பாலாஜியும் சரவணனும் பதில் அளிக்கவேண்டுமென நினைக்கவில்லயா?
இத்திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே. அம்மன் வேடத்தில் நயன்தாராவின் நடிப்பு அருமை. என்றாலும், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனம். இந்த படத்தின் முக்கிய சிக்கல் என்னவென்றால், அடையாள நெருக்கடியால் பாதிக்கப்படுகிறது. இது என்ன வகையான படம் என்பதில் குழப்பம் எழுகிறது. ஏராளமான காட்சிகள் வெட்டப்பட்டிருக்கிறது என்பதை நன்கு உணரமுடிகிறது. அதனால், காட்சிகளின் ஓட்டத்தில் தடுமாற்றம்.
சிலவற்றை முன்னோக்கி வைக்கும் நல்ல விஷயங்களையும் மூக்குத்தி அம்மன் சுட்டிக்காட்டுகிறது. அதிலும் குறிப்பாக, பெருவணிக சாம்ராஜ்யங்களை உருவாக்க ஆன்மீகம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் முன்னேற்றமின்மையிலிருந்து உருவாகும் வேதனையை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. பாலாஜியின் தாயாக ஊர்வசியின் நடிப்பு முழுப் படத்திற்குமான சிரிப்பு.
லாஜிக் மற்றும் தொடர்ச்சியான கதைக்களம் இல்லை என்றாலும், மூக்குத்தி அம்மன் சலிப்பைக் கொடுக்காத ஒருவித பக்தி படம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.