scorecardresearch

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!

Impressed films of Kollywood 2019: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2019-ல் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை.

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
Most Impressed films of 2019

Most Impressed Films of 2019 : இன்னும் சில தினங்களில் 2019-ம் ஆண்டிற்கு கனத்த இதயத்துடன் ‘பை பை’ சொல்லி, 2020-ஐ கட்டித் தழுவி வரவேற்கப் போகிறோம். இதனை முன்னிட்டு கடந்தாண்டின் மறக்க முடியாத சில நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அசைப்போட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2019-ல் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை. இவற்றில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சில படங்களோ சிறந்த கதைகளத்துடன் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. ஆனால் சரியான விளம்பரமின்மை உள்ளிட்ட சில காரணங்களால், இப்படங்களால் பெரியளவிலான வசூல் செய்ய முடியாமல் போனது. ’நேர்க்கொண்ட பார்வை’, ’அசுரன்’, ‘கைதி’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதிகாவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில், ரசிகர்களின் கவனம் ஈர்த்த முதல் பத்து படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.

அசுரன் 

Most Impressed films of 2019, asuran movie
இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் நான்காவதாக வெளியான இப்படம், அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியது. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை ஏற்கனவே படித்திருந்தவர்கள் கூட, அதை திரைப்படமாக பெருந்திரையில் காண ஆர்வமானார்கள். அசுரன் என்றாலே கொடூரமானவன் (இராவணன்) என்றிருந்த கற்பிதத்தை உடைத்திருந்தார் வெற்றிமாறன். பட்டியல் சமூகத்தினருக்கும் இடைநிலை சாதியினருக்குமிடையேயான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை சினிமாத்தனம் ஏதுமின்றி, நிதர்சனத்தை திரையில் காட்டியிருந்தார்.  படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 
most impressed films of 2019, kaithi movie
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் தீபாவளிக்கு வெளியானது. விடுதலையான முன்னாள் ஆயுள் தண்டனை கைதி, குற்றவாளிகளைப் பிடிக்க, போலீஸ் அதிகாரிக்கு எவ்வாறு உதவி செய்கிறான் என்பது தான் கதை. ஆனால் யூகிக்க முடியாத களமும், திரைக்கதையும் படத்தை சுவாரஸ்யமாக்கின. ஒருபுறம் ஆக்ரோஷமான சண்டை, மறுபுறம் மகள் மீது வைத்திருக்கும் அன்புக் கடந்த அன்பு என ரசிகர்களைக் கவர்ந்தார் கார்த்தி. 

சூப்பர் டீலக்ஸ்

most impressed films of 2019, super deluxe
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி விட்டு, 8 ஆண்டுகள் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் தமிழ் சினிமாவின் இத்தனையாண்டு ஃபார்முலாக்களை உடைத்தெரிந்தது. உலகளவில் பல விருதுகளையும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

பேரன்பு

most impressed films of 2019, peranbu movie
தங்கமீன்கள் படத்திற்குப் பிறகு அப்பா – மகள் பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த இயக்குநர் ராமின் மற்றொரு படம் ‘பேரன்பு’. பிளாஸ்டிக் சைல்ட் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு மம்முட்டி, சாதானாவின் நடிப்பால் ரசிகர்களை உணர்வுகளால் தள்ளாட செய்தது. உலகளவில் இந்த படமும் பல விருதுகளை குவித்து வந்தாலும், தியேட்டர்களில் மிகப்பெரிய வசூலை ஈட்ட முடியாமல், விமர்சன ரீதியாக மட்டுமே இந்த படம் வெற்றிப் பெற்றது.

நேர்க்கொண்ட பார்வை 

most impressed films of 2019, nerkonda paarvai
எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருந்தது. படத்தில் இடம்பெற்ற நோ மீன்ஸ் நோ வசனம், தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் நடித்ததற்காக அஜித்துக்கும் பாராட்டுகள் குவிந்தன. 

ஒத்த செருப்பு சைஸ் 7

most impressed films of 2019, oththa seuppu size 7
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருந்த  இந்தப் படம் உலகின் முதல் முயற்சியாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான முயற்சியாகவும் கவனிக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்திருந்தாலும், நடிப்பவரே எழுதி இயக்கியிருந்தது இதுவே முதல் முறை. ஒருவராலேயே சொல்லப்பட்டாலும் திருப்பங்களும் முடிச்சுகளும் கதையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்ற சிறப்பாக உதவி புரிந்தன. 

தடம் 

most impressed films of 2019, Thadam movie
 ‘தடையறத் தாக்க’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும் நடிகர் அருண் விஜயும் இணைந்திருந்த படம் ‘தடம்’. முதன்முறையாக அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், கொலை செய்தது யார் என்கிற முடிச்சை சுற்றி நிகழும் கதை பல திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான். ஆனால் இந்தப் படத்தில் அது பயன்படுத்தப்பட்ட விதமும் களமும் கூடுதல் சுவாரசியத்தை தந்தது.  
Most impressed films of 2019, magamuni
மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமாரின் இரண்டாவது படம் மகாமுனி. இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஆர்யா. வெகுநாட்கள் கழித்து சொல்லிக் கொள்ளும் படமாகவும் அவருக்கு அமைந்திருந்தது. த்ரில்லர் வகை திரைப்பட ரசிகர்களுக்கு பிடித்ததாக அமைந்திருந்தது.  

டூலெட்

tolet movie, most impressed films of 2019
சென்னை பெருநகரில் பிழைக்க வரும் சிறு குடும்பம். வாடகை வீட்டில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள். இந்தச் சின்ன கதைக்குள் உணர்வு, வாழ்வியல், அரசியல், அவலம் எனப் பல மென் உணர்வுகளை அழுத்தமாகப் படைத்திருந்தார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன்.

பக்ரீத் 

bakrid movie, most impressed films of 2019
ஒட்டகத்தை வைத்து முதன்முறையாக ஒரு முழு நீள படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு. விக்ராந்த்தின் குடும்பத்தில் ஒருவனாக ஒட்டகமும், அதன் மேல் அவர்கள் கொண்டிருந்த பாசப் பிணைப்பும் பார்வையாளர்களை கவர்ந்தன. விமர்சன ரீதியாக இந்த படம் சாதித்தாலும், வசூல் ரீதியாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Most impressed films tamil cinema 2019 critically acclaimed movies