மிகப்பெரிய விமர்சனங்களையும், சர்ச்சைகளையும், நெருக்கடிகளையும் தாண்டி உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளபதி விஜய் நடித்திருக்கும் "லியோ" படம் இன்று வெளியானது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா லியோ ? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம் :
காபி ஷாப் ஓனரும் விலங்கு நல ஆர்வலராக இருக்கும் பார்த்திபன் (விஜய்) ஹையனாவை மடக்கி பிடித்து அதனை வளர்க்கிறார். சாண்டி, மிஷ்கின் இருவரும் ஊரில் பல சம்பவங்களை செய்து விட்டு விஜயின் பேக்கரிக்கு வர அங்கிருக்கும் ஜனனியையும் தனது மகளையும் காப்பாற்ற சில சம்பவங்களை செய்கிறார்.
இதனால் கைது செய்யப்படும் விஜய்யின் புகைப்படம் லீக்காக, தன் மகன் லியோ கிடைத்து விட்டான் என ஆண்டனி தாஸ் தனது படையுடன் விஜய்யை நோக்கி புறப்படுகிறார். பார்த்திபன், தான் லியோ இல்லை என பலமுறை சொல்லியும் கேட்காத வில்லன் கும்பல் தொடர்ந்து அவரையும் அவர் குடும்பத்தையும் கொலை செய்ய துடிக்கிறது . இதனை எப்படி விஜய் சமாளித்தார்? பார்த்திபன் தான் லியோவா இல்லை இருவரும் வேறு வேறா என்பதை நோக்கி படம் முடிகிறது.
விஜய் :
வசீகரம், நடனம், ஆக்சன் ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெர்பார்மராக இந்தப் படத்தில் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார் தளபதி விஜய். இந்த வயதில் ஒரு நடிகனால் இவ்வளவு பிட்டாக இருக்க முடியுமா ? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சண்டைக்காட்சிகளில் தீப்பிடிக்கிறது திரையரங்கம். தன் குடும்பத்துக்காக விஜய் கலங்கி அழும் ஒரு காட்சியில் ஒட்டுமொத்த மக்களின் ஈர்பையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். ஒரு நடிகராக விஜயின் திரை வாழ்வில் மிக முக்கியமான ரோல் இது.
மற்ற நடிகர்களின் நடிப்பு :
த்ரிஷாவின் நடிப்பு பிரமாதம். இரு குழந்தைகளின் அம்மாவாக ரசிகர்களின் மனதில் நடிப்பால் வசீகரிக்கிறார். சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் நடிப்பு மிரட்டல்.அவர்களுடைய கதாபாத்திரமும், நடிப்பும் வில்லத்தனத்தின் உச்சம். சாண்டிக்கு ஒரு வித்தியாசமான ரோல். மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பு.
இசை - அனிருத்
படத்தின் முதல் ஹீரோ விஜய் என்றால் இரண்டாவது ஹீரோ அனிருத். படத்தின் பல காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணமாக இவரது இசை அமைந்திருக்கிறது. குறிப்பாக "நா ரெடி" பாடல் திரையரங்கை திருவிழா ஆக்குகிறது. இரண்டாம் பாதியில் பல இடங்களை தன் இசையால் காப்பாற்றி படத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்.
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இன்றைய காலகட்டத்தில் பெரும் ரசிகர் படையை தனக்கென உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் படம் என்றாலே வித்தியாசமும், விறுவிறுப்பும் இருக்கும் என நம்பி வந்த ரசிகர்களை இப்படம் எந்த வகையிலும் ஏமாற்றவில்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகவே அன்பறிவு மாஸ்டர்களுக்கு மிகப்பெரிய பாராட்டை கொடுக்கலாம். படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிற்கும், எடிட்டர் பிலோமின் ராஜுக்கும் மிகப்பெரிய சல்யூட்.
படம் எப்படி :
படத்தின் முதல் 10 நிமிடமே இப்படம் எந்த மாதிரி இருக்கப் போகிறது என்பதை ரசிகர்களுக்கு சொல்லிவிடுகிறது. குடும்ப வாழ்க்கை சண்டை, வில்லன் என்டிரி, ஹையனா என முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது. இடைவேளை ட்விஸ்ட். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை சற்று ரசிகர்களை சோதித்தாலும் கடைசி அரை மணி நேரம் படம் மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று ஒரு பக்கா மாஸ் படமாக முடிகிறது.
குறிப்பு - படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் காட்சிகளும், கதாபாத்திரங்களும் இருக்கின்றன.
மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாடதையும், மக்களுக்கு ஒரு வித்தியாசமான விஜய் படமாகவும் "லியோ" அமைந்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“