கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் இணைந்து நடித்துள்ள "சிங்கப்பூர் சலூன்" எப்படி உள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் காணலாம்
கதைக்களம் :
கிராமத்தில் வசிக்கும் நாயகன் கதிர் (ஆர்.ஜே. பாலாஜி) தன் ஊரில் முடிதிருத்தும் சாச்சாவின் (லால்) அபார திறமையை பார்த்து வியந்து அவரை தன் ரோல் மாடலாக கருதுகிறார். ஒரு நாள் தானும் அவரை போன்று சிறந்த முடிதிருத்துனராக வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக போராடுகிறார். சமூகத்தின் பல தடைகளை தாண்டி நாயகன் தன் லட்சியத்தில் வென்றாரா ? இல்லையா ? என்பதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
கனவுக்காக போராடும் நடுத்தர இளைஞன் சந்திக்கும் போராட்டங்களை தன்னுடைய இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. அவரின் முழு நடிப்பு திறனை சோதிக்கும் கதாபாத்திரத்தில் பாஸ் மார்க் வாங்கி நாயகனாக வென்றிருக்கிறார்.
கதிரின் மாமனாராக நடித்திருக்கும் சத்யராஜ் கஞ்சனாக கலக்கிருக்கிறார்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் சத்யராஜின் நடிப்பு அபாரம். நாயகி மீனாட்சி சௌத்ரிக்கு அழுவதைத் தவிர நடிக்க பெரிதாக வேலை இல்லை.கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால், ரோபோ ஷங்கர் ஆகியோரும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாகச் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை :
தன் வழக்கமான பாணியில் காமெடி மற்றும் கலகலப்பை பிரதானமாக வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் பெரியளவில் ஈர்க்கவில்லை.
ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை படத்திற்குச் தேவையானதைச் செய்திருக்கிறது.எடிட்டர் செல்வகுமார் மற்றும் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது
படம் எப்படி ?
முதல் பாதியின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் கட்டிபோடுகிறது. குறிப்பாக சத்யராஜ் செய்யும் லூட்டிகளுக்கு சிரித்து சிரித்து கண்ணீரே வரும் அளவிற்கு குஷிப்படுத்துகிறது. இடைவெளிக்கு முன்னர் வரும் நகைச்சுவை காட்சிகள் தான் படத்தின் பெரிய ஹைலைட்.
இப்படி முதல் பாதி முழுவதும் Fun மோடில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸ் மோடுக்கு செல்கிறது. ஜெயிக்க துடிக்கும் இளைஞனின் போராட்டம் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது. ஆனால் மழை, வெள்ளம், பறவைகளின் அழிவு, டிவி ரியாலிட்டி ஷோ, Social Media புரட்சி என படத்தில் ஏகப்பட்ட சமூக கருத்துக்களை திணித்திருக்கிறார்கள்.
அவை ஒருகட்டத்திற்கு மேல் நம் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் காட்சிகளை எளிதாக யூகிக்க முடிவதால் இரண்டாம் பாதியில் சுவாரசியம் குறைகிறது.
லோகேஷ் கனகராஜ், ஜீவா மற்றும் சில சஸ்பென்ஸ் Cameo கதாபாத்திரங்கள் ஓரளவிற்கு படத்துக்கு கை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் Motivation கலந்து ஒரு சராசரி பீல் குட் படமாக "சிங்கப்பூர் சலூன்" முடிகிறது
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“