இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கேப்டன்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ள மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். மேலும் தமிழ் திரையுலகில் எல்.ஜி.எம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்த தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முன்பே விளம்பரங்களில் நடித்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அதர்வா என்ற வரலாற்று வெப் தொடர் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
ஆனால் இந்த தொடரின் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை என்றாலும், நடிப்பு குறித்த தோனி தனது கருத்துக்களை வெளிப்படுத்திய வீடியோ பதிவு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ள தோனிக்கு, ஒரு நடிகராக இருப்பது மிகவும் கடினமான விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஒரு இயக்குனரின் நடிகர், அவரது நடிப்பு நன்றாக இல்லை என்று சொன்னால் அது அவரது தவறு அல்ல, அவரை தேர்வு செய்த இயக்குனரின் தவறு என்றும் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர்கார்டு ப்ரைஸ்லெஸ் மூவ்மெண்ட் நிகழ்ச்சிக்காக மந்திரா பேடியிடம் பேசிய தோனி, பங்கஜ் கபூருடன் இணைந்து மாஸ்டர்கார்டு விளம்பரத்தில் நடித்ததற்கான முழு காரணமும் தனது இயக்குனர் தான் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய தோனி, ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்றால் நான் ஒரு இயக்குனரின் நடிகர் என்று கூறியுள்ளார். மேலும் டைலாக்களை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் கடினம். அதனால் இயக்குநர் சொல்வதைச் செய்வேன். அது சரியில்லை என்றால் அது இயக்குனரின் பிரச்சனையே தவிர என் பிரச்னை அல்ல என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தந்தையாக தனது மகள் ஷிவா குறித்து பேசிய தோனி, “நான் அவளை (ஷிவா) முதல் முறையாக பார்க்கும்போது அவளுக்கு வயது இரண்டரை மாதங்கள் இருந்திருக்கும். என்னை முதல்முறை பார்த்ததால் நிறைய சத்தம் போட்டாள். ஆனால் ஒன்று அல்லது இரண்டு மாத குழந்தைகளால் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அதனால் அவள் என்னைப் பார்த்தாளா இல்லையா என்பதுஎனக்குத் தெரியவில்லை. ஆனால் 5 நிமிடங்களுக்கு மேலாக அவள் சிரித்துக்கொண்டே சத்தம் போட்டாள், ஏன் அதை செய்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை."
பெற்றோராக மாறுவது குறித்து உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது ஷிவா பிறந்த நாளிலிருந்து இப்போது வரை, மிகவும் ஆர்வமுள்ளவராகவும், கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ள தோனி, யாரோ அவளிடம் தந்தையை ஏன் நேசிக்கிறீர்கள் என்று கேட்டால், அப்பா பணம்" என்று பதில் அளித்ததாக தோனி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“