தமிழ் திரையிசைப் பாடல் வரிகள் என்றால் அது கவிஞர் கண்ணதாசன்தான் என்று இப்போதும் சொல்கிறார்கள். காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் நிறைய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கின்றன. திரையிசைப் பாடல்களில் இசையமைப்பாளர் - கவிஞர் வெற்றிக் கூட்டணி என்பது சும்மா அமைந்துவிடாது. இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அப்படி, இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - கவிஞர் கண்ணதாசன் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இன்றைய கிளாசிக் ஸ்டோரியில் பார்ப்போம். எம்.எஸ்.வி ஒரு பரிசோதனை முயற்சியாக பாடல் வரிகள் இல்லாமல் ஒரு பிரமாதமான மெட்டு போட, அது கவிஞர் கண்ணதாசனுக்கு ரொம்ப பிடித்துப் போனதால், கவிஞர் கண்ணதாசன் கெஞ்சி வாய்ப்பு கேட்டு பாட்டு எழுதியிருக்கிறார். அது ஒரு தாம்பத்ய பாடல்.
ஜூன் 22, 1963-ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் தருகிறார். அடுத்த ஆண்டு, பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் பார் மகளே பார். இந்த படத்தில் ஒரு பரிசோதனை முயற்சியாக எம்.எஸ்.வி. பாடல் வரிகளே இல்லாமல் ஒரு மெட்டு போட்டிருக்கிறார். அதாவது, கதாநாயகன் - கதாநாயகி தொட்டிலில் இரண்டு குழந்தைகளை ஆட்டிவிட்டுக் கொண்டு கதாநாயகன் விசில் சத்தத்தில் ஹம்மிங் கொடுக்கிறார். பதிலுக்கு கதாநாயகி குரலில் ஹம்மிங் செய்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனைப் பாக்க வந்த கவிஞர் கண்ணதாசன் என்ன என்று விசாரிக்கிறார். அதற்கு, எம்.எஸ். விஸ்வநாதன் இது போல விசில், ஹம்மிங் வைத்து ஒரு பரிசோதனை முயற்சி செய்ய உள்ளதாகக் கூறுகிறார். கண்ணதாசன் மெட்டை வாசித்துக் காட்டச் சொல்கிறார். கண்ணதாசனுக்கு மெட்டு மிகவும் பிடித்துப்போய்விட்டது. அதனால், இந்த மெட்டுக்கு நான் பாட்டு எழுதுகிறேன் என்று கேட்கிறார். ஆனால், எம்.எஸ்.வி இதற்கு பாடல் வரிகளே இல்லை என்று கூறுகிறார். இதனால், கவிஞர் கண்ணதாசன் அந்த படத்தின் தயாரிப்பாளர் சுப்புராமனிடம் கேட்கிறார். அவர் உங்களுக்கும் எம்.எஸ்.வி-க்கும் உள்ள பிரச்னை இதில் என்னை இழுக்காதிர்கள் என்று கூறிவிடுகிறார். சிவாஜிக்கு போன் போட்டு கேட்கிறார். உங்கள் விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள் என்று கூறுகிறார். கடைசியாக கவிஞர் பீம்சிங் இடம் பேசுகிறார். பீம்சிங், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி-யிடம் கவிஞர் ரொம்ப விரும்புகிறார். பாட்டு எழுதட்டும் என்கிறார். அதனால், எம்.எஸ்.வி ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், எம்.எஸ்.வி தனது பரிசோதனை முயற்சியையும் விட்டுத்தராமல் கவிஞர் கண்ணதாசனின் விருப்பமும் நிறைவேறும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார்.
அந்த பாடலில், விசில் - ஹம்மிங் பாடல் வரிகள் என மூன்றுமே இருக்கும், அந்த பாடல்தான், கவிஞர் கண்ணதாசன் எழுதிய நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்ற பாடல்.
இந்த காலத்தால் அழியாத பாடல் ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.