இயக்குநர் ஸ்ரீதர் இயகக்த்தில், 1962-ஆம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்தப் படத்தில், முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமாக நடித்த குட்டி பத்மினி மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இந்தபடம், பிரபல ஆங்கில படமான 'காசாபிளாங்கா’வின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் தயாரிப்பு பணிகள் நடக்கும்போதுதான், கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதாமல் காலம் கடத்திய நிலையில், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கோபத்தில், இனிமேல் நீங்கள் எழுதும் பாடலுக்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய, அடுத்த நொடியே பாட்டால் கூல் செய்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அந்த பாடல் மெகா ஹிட் ஆனது மட்டுமல்ல, அமரத்துவம் பெற்ற பாடலாக மாறியது. அது என்ன பாடல், என்ன சம்பவம் என்று விரிவாகப் பார்ப்போம்.
இயக்குநர் ஸ்ரீதர் ஒரு படத்தை 23 நாட்களில் ஷூட்டிங் எல்லாம் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். படத்தில் இடம் பெறும் 6 பாடல்களை எழுத கவிஞர் கண்ணதாசனை அழைத்து, “கவிஞரே வழக்கம் போல, பாடல் எழுதுவதற்கு நாட்களைக் கடத்தி கால தாமதம் செய்யாதீர்கள். இந்த படம் 23 நாட்களில் ரிலீஸ் செய்ய வேண்டும். படத்தில் 6 பாடல்கள் எழுத வேண்டும்” என்கிறார். கவிஞர் கண்ணதாசனும் பாடல்களை எழுத ஒப்புக்கொள்கிறார்.
அதோடு விடாமல், இயக்குநர் ஸ்ரீதர், 5 நாட்களில் 6 பாடல்கள் எழுத வேண்டும் என்கிறார். அதற்கு கவிஞர் கண்ணதாசன், பெங்களூரு சென்று உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பாட்டு எழுதுகிறேன் என்கிறார்.
பாடல் எழுதுவதற்காக கவிஞர் கண்ணதாசனும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனும் பெங்களூரு சென்று உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு போய் சேருகிறார்கள். ஹோட்டலுக்கு போனதும், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், “அண்ணே, பாட்டு எழுதிவிடலாமா?” என்று கேட்கிறார்.
அதற்கு கவிஞர் கண்ணதாசன், “ஹோட்டலுக்கு வந்ததும் வராததுமாக? வந்த உடனே யாராவது பாட்டு எழுதுவானா? குளித்துவிட்டு வந்து பாட்டு எழுதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
குளித்துவிட்டு வந்த பிறகு, எம்.எஸ். விஸ்வநாதன், “அண்ணே, பாட்டு எழுதிவிடலாமா?” என்று கேட்கிறார்.
அதற்கு கவிஞர் கண்ணதாசன், “குளித்துவிட்டு உடனே யாராவது பாட்டு எழுதுவானா? பசிக்குது சாப்பிட்டுவிட்டு பாட்டு எழுதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு, எம்.எஸ். விஸ்வநாதன், “நீங்கள் இப்படி சொல்வீர்கள் எனத் தெரியும், வாருங்கள் சாப்பிடுவோம்” என்கிறார்.
ஆனால், கவிஞர் கண்ணதாசன், “நான் சாப்பிடுவதற்கு முன்பு சற்று சரக்கு போட வேண்டும்” என்கிறார்.
பிறகு, கவிஞர் கண்ணதாசன் மது அருந்திவிட்டு, சாப்பிட்டு முடிக்கிறார்.
இப்போது, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், “அண்ணே, இப்போது பாட்டு எழுதிவிடலாமா?” என்று கேட்கிறார்.
இதற்கு கவிஞர் கண்ணதாசன், “குளித்துவிட்டு, குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு யாராவது பாட்டு எழுதுவானா? சற்று உறங்கிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனும் சரி என்று ஒப்புக்கொள்கிறார். கவிஞர் கண்ணதாசன் உறங்கச் சென்றுவிட்டார். இப்படியாக 5 நாளும் ஒரு பாட்டு கூட எழுதாமல் 5 நாள் ஆகிவிட்டது. ஐந்தாவது நாள், சென்னையில் இருந்து, இயக்குநர் ஸ்ரீதர் போன் செய்கிறார். போனை எடுத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம், “பாட்டு எழுதி முடித்தாகிவிட்டதா” என்று கேட்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், “5 பாட்டு எழுதிவிட்டோம், இன்னும் ஒரு பாட்டு இருக்கிறது. அதை எழுதிவிட்டு வந்துவிடுகிறோம்.” என்று இயக்குநர் ஸ்ரீதரிடம் பொய் சொல்கிறார்.
நேராக கவிஞர் கண்ணதாசன் அறைக்குச் சென்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அண்ணே பாட்டு எழுதிவிடலாமா என்று கேட்கிறார். இதற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிவிடலாம், இதோ குளித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது, கோபத்தில், “கவிஞரே, இனிமேல் நீங்கள் எழுதும் பாட்டுக்கு நான் சத்தியமாக இசையமைக்க மாட்டேன்” என்று சபதம் செய்கிறார்.
இதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன், “விஸ்வநாதா, சொன்னது நீதானா? சொல் சொல் என்னுயிரே” என்று கூறுகிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து “அண்ணே என்னன்னே சொல்கிறீர்கள்” என்று நெகிழ்ச்சியாகக் கேட்கிறார்.
கவிஞர் கண்ணதாசன் இதுதான் பாடல் வரி சொல்கிறேன் எழுதிக்கொள் என்று கூறுகிறார். அப்படி உருவான பாடல்தான், “சொன்னது நீதானா? சொல் சொல் என்னுயிரே” பாடல். அன்றைக்கே மற்ற 5 பாடல்களும் எழுதி முடிக்கப்பட்டது. இந்த பாடல் செம ஹிட் ஆனது.
இப்படி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கோபத்தில், இனிமேல் நீங்கள் எழுதும் பாடலுக்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று சபதம் செய்ய, அடுத்த நொடியே, கவிஞர் கண்ணதாசன் பாட்டால் கூல் செய்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.