ஒரு மனிதனின் ஆளுமையும் பண்பும் வளர்ப்பில்தான் இருக்கிறது என்பதைச் சொல்லும் படம் முன்னோடி.
யாருக்கும் அடங்காத பையன் ஹரீஷ், ரவுடிகள் சகவாசத்துடன் வளருகிறார். படித்து முடித்து வெட்டியாகச் சண்டியர்த்தனத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் இவருக்குத் தன்னை விடத் தன் தம்பி மீது அதிகப் பாசம் காட்டுகிறாரே என அம்மா மீதே கோபம். இவருக்கு ஒரு காதலியும் உண்டு (யாமினி பாஸ்கர்).
அந்த ஊரின் மிகப்பெரிய ரவுடி அர்ஜுனாவின் வலது கையாக இருக்கும் ஹரீஷுக்கு ஒரு கட்டத்தில் அந்த அர்ஜுனாவாலேயே பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. அர்ஜுனின் சகவாசத்தால் தன் தம்பியை இழந்து குற்றவுணர்ச்சியில் தவிக்கும் ஹரீஷ் அடுத்து என்ன செய்கிறார், இவருடைய காதல் என்ன ஆயிற்று என்பதுதான் கதை.
யாரிடமும் உதவி இயக்குனராகப் பணி புரியாமலேயே துணிந்து களமிறங்கியிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.ராஜ்குமார். கதையை ஓரளவு வேகத்தோடும் நேர்த்தியாகவும் திரையில் சொல்லத் தெரிந்திருக்கிறது இவருக்கு. ரவுடி சகவாசம், வெட்டித்தனம், அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி, அதன் பிறகான நடவடிக்கைகள் எனக் கதையிலோ திரைக்கதையிலோ புதிதாக எதுவும் இல்லை என்பதுதான் பிரச்சினை. பல காட்சிகள் எதிர்பார்த்தபடியே வந்து போகின்றன. காதலிக்கும் பெண்ணே தன் தம்பியைக் காதலிக்கிறாள் என்னும் சந்தேகத்துடன் ஹரீஷ் கொலை வெறி கொள்ளும் தருணத்தில் படத்தில் வரும் திருப்பம் எதிர்பாராதது.
படத்தில் காதல் இருக்கிறது. நகைச்சுவை இருக்கிறது. ஆனால் இந்தக் காட்சிகளோ இவற்றில் வரும் வசனங்களோ ஈர்க்கவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இயக்குனருக்குள் இருக்கும் திரைக்கதை ஆசிரியர் நிமிர்ந்து நிற்கிறார். குறிப்பாக அந்த போலீஸ் அதிகாரியின் பாத்திரமும் அவருடைய நடவடிக்கைகளும் அசரவைக்கின்றன.
சண்டைக் காட்சிகளைத் தனியாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, கோவிலில் நடக்கும் சண்டை அபாரமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. சண்டைப் பயிற்சியாளர் டேஞ்சர் மணிக்கு ஒரு சபாஷ். கூலிப்படை இளைஞர்களின் பழக்க வழக்கங்களும், அவர்கள் கொலை செய்யும் விதமும் பதைபதைக்கவைக்கின்றன.
பாடல் காட்சிகளில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயக்குனர் இயற்கை அழகை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். ரசனையான இந்தக் காட்சிகள் சபாஷ் போடவைக்கின்றன. ஒளிப்பதிவாளர் வினோத் ரத்னசாமிக்குப் பாராட்டுகள்.
நகைச்சுவை என்னும் பெயரில் நம்மைச் சோதிக்கும் காட்சிகளுக்கு ஈவு இரக்கமில்லாமல் கத்திரி போட்டிருக்கலாம். முரட்டுத்தனத்தையும் ஆவேசத்தையும் ஹரீஷ் நன்றாக வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகளில் கொஞ்சம் கனிவு எட்டிப் பார்க்கிறது.
கதாநாயகி யாமினி புதுமுகம். நடிப்பில் இன்னமும் மெனக்கெட வேண்டும். மந்திர மூர்த்தி என்ற அரசியல்வாதி கேரக்டரில் அர்ஜுனா பார்வையிலும் முகபாவனைகளிலும் மிரட்டிவிடுகிறார். இசை பிரபுசங்கர் என்ற புதுமுகம். பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருக்கின்றன. காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையைத் தருவதிலும் குறை வைக்கவில்லை.
எளியவனுக்கும் வலியவனுக்கும் இடையிலான மோதலில் அடி வங்கும் எளியவன் பதிலுக்கு என்ன செய்வான் என்பதை வைத்துப் பல படங்கள் வந்துவிட்டன. இந்தக் கதையை வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கும் அறிமுக இயக்குனர் எஸ்பிடிஏ குமார், இதற்கான பதிலைச் சொல்வதில் தேறிவிடுகிறார். சண்டைக் காட்சிகள், திருப்புமுனைகள் ஆகியவையும் பரவாயில்லை. ஆனால், கதையிலோ திரைக்கதைப் போக்கிலோ புதுமை எதுவும் இல்லை. காதல், நகைச்சுவைக் காட்சிகள் கவரும் வகையில் இல்லை. இந்தக் குறைகளைக் கவனமாகத் தவிர்த்திருந்தால் முதல் படமே முத்திரைப் படமாக இருந்திருக்கும்.