கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த இசைஞானி இளையராஜாவின் லைவ் இசைக்கச்சேரி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் தமிழ் உள்பட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இன்றைய நவநாகரீக இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலும் அவர் இசையமைத்து வருகிறார்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் 20,000க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை இளையராஜா நடத்தி உள்ளார். பல லைவ் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை தனது மெல்லிய இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் லைவ் கச்சேரி ஒன்றை நடத்தினார்.
முதல் முறையாக இந்த கச்சேரியில் 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 2019 ல் கோவையிலும் முதல் முறையாக லைவ் கச்சேரியை நடத்தினார் இளையராஜா.
அதன் பிறகு கொரோனாவால் மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்த இசைக் கச்சேரிகளை இளையராஜா ஒத்திவைத்தார்.
இந்நிலையில் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இசைக்கச்சேரி நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரும் மார்ச் மாதம் இந்த லைவ் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். Rock with Raaja என்ற தலைப்பில் இந்த லைவ் கச்சேரி நடைபெற உள்ளது. இசை கச்சேரி எந்த தேதியில் நடைபெற உள்ளது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “