36 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர் (92) இந்தியாவின் நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர்.
இந்தக் கட்டுரையில் அவரது பிறப்பு, சாதனைகள், பெற்ற விருதுகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.
பிறப்பு:
சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார் லதா மங்கேஷ்கர்.
இவரது தந்தை தீனநாத் மங்கேஷ்கர், தாயார் ஷேவந்தி. இவரது தந்தை மராத்தி மற்றும் கொங்கனி மொழி இசைக் கலைஞராவார். உடன் பிறந்தவர் 4 பேர். ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், மீனா கடிகர், ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆகியோர் ஆவர்.
ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் லதா மங்கேஷ்கர் அதிகப் பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கருக்கு 13 வயது இருக்கும்போது இவரது தந்தை இதயக் கோளாறால் காலமானார். நவ்யுக் சித்ரபத் என்ற பட கம்பெனியை நடத்தி வந்த மாஸ்டர் விநாயக், மங்கேஷ்கர் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்.
அவர் தான் லதா மங்கேஷ்கரை பாடகராகவும், நடிகையாகவும் ஆவதற்கு உதவினார். அவர் தயாரித்த சில படங்களிலும் லதா மங்கேஷ்கர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பின்னர், ஹிந்துஸ்தானி சங்கீதத்தை கற்கத் தொடங்கினார் மங்கேஷ்கர்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை 1956ஆம் ஆண்டு வெளியான வனரதம் என்ற படத்தில் அறிமுகமானார்.
பல மொழிகளில் பாடியுள்ள இசை குயில் லதா மங்கேஷ்கர் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
பெற்ற விருதுகள்:
1991, 1973, 1975 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றுள்ளார். திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாஹேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார். கலைத் துறைக்கு ஆற்றிய முக்கியப் பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.
மறைந்த பிரபல கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலஷ்மிக்கு பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர் ஆவார்.
மகாராஷ்டிர மாநில விருதை 2 முறையும், ஃபிமில்ஃபேர் விருதுகள் 7 முறையும், பெங்கால் திரைப்பட செய்தியாளர்கள் சங்க விருதை 11 முறையும் பெற்றுள்ளார்.
குடும்பப் பொறுப்பை கவனிக்க வேண்டும் என்பதற்காக கடைசி வரை திருமணமே செய்யாமல் வாழ்ந்தார் லதா மங்கேஷ்கர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
லதா மங்கேஷ்கரின் உடல் மும்பை சிவாஜி பார்க்கில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான ஏற்பாடுகளை பிருஹன்மும்பை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil