ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 10ம் தேதி பொங்கல் சிறப்பு படமாக வெளியானது பேட்ட. த்ரிஷா மற்றும் சிம்ரன் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்திருந்தார். ரஜினி - அனிருத் கூட்டணியில் வெளியான முதல் படமான பேட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
ரஜினி 166 படத்தில் அனிருத் ரவிசந்தர்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ளது உறுதியானது. ரஜினியின் 166வது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து முருகதாஸ் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஹீரோயினாக நயன்தாராவும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது, 45 நாட்களில் இப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சில தகவல் வட்டாரங்கள் கூறுகின்றது.