இசைஞானி இளையராஜா 75-வது பிறந்தநாள் விழா தமிழக கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையைத் தொடர்ந்து நேற்று சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
Advertisment
இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட இளையராஜா 23,000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இசைஞானி இளையராஜா பேச்சு
இதனைத் தொடர்ந்து, தனது அனுபவங்களை பற்றி மாணவர்களிடம் பேசினார் இளையராஜா. மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக்குறைந்த நேரத்தில் இசையமைத்தாக தெரிவித்தார். மேலும், உதயகீதம் படத்தில் வரும் 'பாடும் நிலாவே' பாடலுக்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
Advertisment
Advertisements
தான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரிதான் உள்ளது என்றும், வேறுபாடு எதுவும் இல்லை என்றவர், ஒரே மாதிரியான ஸ்வரங்களை ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் பல்வேறு விதமான பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றார். தொடர்ந்த அவர், "சிந்தனை உள்ள இசையமைப்பாளர்களுக்கு இதுபோன்று பாடல்கள் வரும். சிந்தனை இல்லாதவர்கள் காப்பிமட்டுமே அடிக்க வேண்டும். பிறகு காப்பி அடிப்பதிலேயே அவர்களது காலம் சென்றுவிடும்" என்றார்.
மேலும் "நான் 8-வது படித்து முடித்ததும், பள்ளிக் கட்டணம் கட்டுவதற்காக மாமாவுடன் வைகை ஆற்றங்கரையில் வேலை செய்தேன். அப்போது எனக்கு மொத்தமாக 7 ரூபாய் ஊதியமாக கிடைத்தது. அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முதல் படத்தின் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். அந்த மகிழ்ச்சி இப்போது 7 கோடிரூபாய் சம்பளம் வாங்கியும் கிடைக்கவில்லை. பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசையை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், அடுத்த தலைமுறையினருக்கு பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுக்க வேண்டும், அப்போது தான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்" என்றார்.
அதிகம் காதல் பாடல்களை எழுதி உள்ளீர்கள், நீங்கள் சிறுவயதில் காதலித்து உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, நான் லைலா, மஜ்னுவை தான் அதிகளவில் காதலித்தேன். என்னுடைய காதல் கற்பனையில் மட்டும் தான் என அரங்கத்தை கலகலப்பூட்டினார்.