தமிழ் சினிமாவில், மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன், பல ஹிட் பாடல்களை கொடுத்து இன்றுவரை நிலைத்திருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் சினிமா தொடர் இல்லாமல் இருந்தாலும் அவரது மருமகள் பிரபல நடிகை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். முதல் படமே இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி அறிமுக நடிகர்கள் வரை பலரின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பில் இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. திரையுலகில் எம்.எஸ்.வி இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்த எம்.எஸ்.வி, தனது 7 பிள்ளைகளில் ஒருவரை கூட திரைத்துறை தொடர்பான எந்த வேலைகளிலும் கொண்டுவரவில்லை.
இன்னும் எம்.எஸ்.விஸ்வநாதன் பிள்ளைகள் யார் யார் என்பது குறித்து மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத நிலை தான் இருக்கிறது. ஆனாலும், எம்.எஸ்.வியின் மருமகள்களில் ஒருவர் பிரபல நடிகை என்பது பலரும் அறிந்திடாத ஒரு தகவல். எம்.எஸ்.விஸ்வநாதனின் மூத்த மகன் கோபி கிருஷ்ணாவின் மனைவி சுலோக்சனா. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
/indian-express-tamil/media/media_files/aFI0yHsKTVa2fAggIpoi.jpg)
தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுலோக்சனா, புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கும், மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவுக்கும் டப்பிங் கலைஞராக குரல் கொடுத்துள்ளார். எம்.எஸ்.வி மகன் கோபி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுலோக்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், வீட்டை மீறி திருமணம் செய்துள்ளனர்.
திருமணம் முடிந்து சில மாதங்களில் இரு குடும்பத்தாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர். 3 குழந்தைகள் பிறந்த பிறகு கோபி கிருஷ்ணனா - சுலோக்சனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது சுலோக்சனா தனது 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“