சென்னை:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட அனிதா சம்பத் தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சன்டிவியின் செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் அறிமுகமானவர் அனிதா சம்பத். தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழ்பெற்றார். 83 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு, கடந்த வாரம் ரசிகர்களிடமிருந்து போதிய வாக்கு வரவில்லை என்பதால், கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசனில் அதிக ரசிகர்களை கொண்ட ஆரி மற்றும் பாலா இருவரிடமும் அனிதா சண்டை போட்டதால் தான் அவருக்கு வாக்குகள் குறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, அவரது தந்தைதையும், எழுத்தாளருமான ஆர்.சி. சம்பத் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தனது மகனுடன் கடந்த வியாழன் கிழமை ஷீரடி சென்றிருந்த சம்பத், மீண்டும் சென்னை திரும்பும்போது, பெங்களூரு அருகே மாரடைப்பால் ரயிலிலேயே மரணமடைந்தார்.
பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது. இந்த மரணம் அனிதா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 நாட்களுக்கு மேலாக தனது தந்தையை பார்க்காத அனிதா தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவரை எப்போதும் பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள் பதிவில்,
எனது தந்தை ஆர்.சி.சம்பத் திடீரென மரணமடைந்தார். அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை தனிமைப்படுத்திக் கொள்ள சென்ற போது அவரை சந்தித்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்தபோது, என்அப்பா சீரடி சென்று விட்டார். ஆனால் அடுத்த நாள் காலை அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்.
அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி.. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப..
சாரி டாடி என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி என்ன விட்டு போகாது..
.
எங்க போன ராசா... என அனிதா சம்பத் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.