கேரளாவை பூர்வீகமாக கொண்ட மலேசியாவை சேர்ந்த சத்து நாயர்- அம்மாளு தம்பதிக்கு 8-ஆவது மகனாக பிறந்தவர் வாசுதேவன். மலேசியாவில் பிறந்ததால் மலேசியா வாசுதேவன் என அழைக்கப்பட்டார். சென்னை வந்து திரைப்பட வாய்ப்பு தேடியபோது "பாலு விக்கிற பத்தம்மா" என்ற பாடலை பாடி அறிமுகமானார். தொடர்ந்து கமலுக்காக "16 வயதினிலே" படத்தில் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்ற பாடலை பாடினார். அவர் பாடும் பாடல் அந்த நடிகர்களே பாடும்படியாக இருக்கும். குரலில் அத்தனை கணீர் சப்தம் இருக்கும். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை எஸ்.பி.பி. தான் பாட வேண்டும். ஆனால் அன்றைய தினம் அவருக்கு குரலில் பிரச்னை இருந்ததால் அந்த வாய்ப்பு மலேசியா வாசுதேவனுக்கு கிடைத்தது.
செவ்வந்தி பூ முடித்து சின்னக்கா, ஒரு தங்க ரதத்தில், தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி, கோடை கால காற்றே, பூங்காற்று திரும்புமா,வெட்டிவேரு வாசம், ஒரு கூட்டு கிளியாக , பொதுவாக என் மனசு தங்கம், தானந்தன கும்மிகொட்டி, பொட்டு வச்ச தங்ககுடம், ஆசை நூறு வகை, என்னம்மா கண்ணு சவுக்கியமா உள்ளிட்ட பல பாடல்களை பாடி ஹிட்டாக்கி உள்ளார்.
கம்பீரமான குரலில் 8,000-க்கும் அதிகமான திரையிசைப் பின்னணிப் பாடல்கள். 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திர நடிப்பு என தமிழ் சினிமாவில் தனி அடையாளத்துடன் ஜொலித்தவர் மலேசியா வாசுதேவன். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய குழந்தைகள் உள்ளனர். இதில் யுகேந்திரன் திரைப்படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ளார்.
மகள் பிரஷாந்தினி பின்னணிப் பாடகியான இவர், `முன்தினம் பார்த்தேனே (வாரணம் ஆயிரம்)', `அய்யயோ நெஞ்சு (ஆடுகளம்)' உட்பட, பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அண்மையில், பிரஷாந்தினி தனது தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து யூடியூப் சேனல்ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: அப்பாவின் உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்ந்திருந்தோம். அங்கு நாங்கள் பார்க்க போயிருந்தோம். அப்போது அப்பாவால் பேச முடியவில்லை. எங்களை பார்த்ததும் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்தது. நாங்கள் அவருக்கு தைரியம் சொன்னோம். இளையராஜா சாருக்காக அவருடைய உயிர் காத்துக் கொண்டிருந்தது என நான் நினைக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே இளையராஜா சார், மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அப்பா இருந்த அறையின் கதவை திறந்து அவர் உள்ளே வந்ததும் அப்பாவின் உயிர் பிறந்தது. இளையராஜா சார், வாசு வாசு என அழைத்து பார்த்தார். நண்பர்கள் என்றால் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள், வெளியே போவார்கள். அப்படியெல்லாம் இல்லை. இவங்க நட்பு கொஞ்சம் வித்தியாசமான நட்பு. அடிக்கடி தொடர்புல இருக்கிற நட்பு கிடையாது. மனசுக்குள்ள பேசிப்பாங்கன்னு சொல்வாங்க இல்லையா அது போன்ற ஒரு நட்புதான் இவர்களது என நான் நினைக்கிறேன். இவ்வாறு பிரசாந்தினி உருக்கமாக தெரிவித்திருந்தார்.