/indian-express-tamil/media/media_files/2025/06/23/eee-2025-06-23-14-30-45.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2012-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "நான் ஈ" (தெலுங்கில் ஈகா). அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான CGI (கணினி உருவாக்கப்பட்ட படங்கள்), குறிப்பாக இந்த படத்தில் ஈயின் சித்தரிப்புக்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டது.
நானி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் வில்லனாக கிச்சா சுதீப் நடித்திருந்தார். சமந்தா ஹீரோயின் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படத்தை வாராஹி சலன சித்ரம் நிறுவனம் தயாரித்திருந்தது. "நான் ஈ" திரைப்படம் ராஜமவுலியின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதனிடையே நான் ஈ" படத் தயாரிப்பாளர்கள் மலையாளத் திரைப்படமான "லவ்லி" மீது காப்புரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
"லவ்லி" படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஈ வடிவமைப்பு தங்கள் படத்திலுள்ள ஈயை ஒத்திருப்பதாகக் கூறி, இந்த சட்ட நோட்டீஸை அனுப்பியுள்ளனர். இது குறித்து மீடியா தகவல்களின்படி, இந்த நோட்டீஸ் "நான் ஈ" படத்தின் ஈ கதாபாத்திரம், அதனுடைய அனைத்து காட்சி, அழகியல் மற்றும் கதைக்கள கூறுகள் தங்களுடைய பிரத்யேக அறிவுசார் சொத்து என வலியுறுத்துகிறது. "எங்கள் சம்மதம் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நகலெடுப்பது அல்லது இமிட்டேட் செய்வது, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் காப்புரிமை மீறலாகும்" என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த காப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ள "லவ்லி" படத்தின் இயக்குநர் திலீஷ் கருணாகரன், தங்கள் படத்திற்கான CGI தனியாகவே உருவாக்கப்பட்டது என்றும், இதை நிரூபிக்கத் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மே 16 அன்று வெளியான "லவ்லி" திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது. மேத்யூ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வெஸ்டர்ன் காட்ஸ் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
உன்னிமாயா பிரசாத், மனோஜ் கே. ஜெயன் மற்றும் அஷ்வதி மனோகரன் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காப்புரிமை சர்ச்சை "நான் ஈ" படக்குழுவுக்கும் "லவ்லி" படக்குழுவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.