தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சங்கத்தின் புதிய தேர்தலை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சங்கத்திற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே சங்கத்தின் உறுப்பினராக இருந்த 61 பேர் தங்களை எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி சென்னை மாவட்ட சங்க பதிவாளரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை பரிசீலித்த மாவட்ட பதிவாளர் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருவதாகவும் வாக்காளர் பட்டியலில் உள்ளிட்டவை தொடர்பாக இந்த புகார்கள் வருவதால் தேர்தலை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சென்னை மாவட்ட பதிவாளரின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தரப்பில், வழக்கறிஞர் கிருஷ்ணா, உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு இந்த முறையீட்டை செய்தார்.
அந்த முறையீட்டில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார். அவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் இதனை அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் நீதிபதி ஆதிகேசவலு இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உடனடியாக இன்றைய விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.