Nadigar Sangam Election 2019: நடிகர் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூழலில், ரஜினிகாந்துக்கே தபால் வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை என பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர். இதனால் தேர்தல் முறையாக நடக்குமா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல், பொதுத் தேர்தலை மிஞ்சிய பரபரப்பை பெற்றிருக்கிறது. விஷால்- நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஒரு தரப்பாகவும், பாக்யராஜ்- ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் மற்றொரு தரப்பாகவும் மல்லுக்கட்டுகிறார்கள்.
சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி (திங்கட்கிழமை) இந்தத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே தேர்தல் நடைபெறும் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியை அதே நாளில் தனது நாடகத்திற்கு ‘புக்’ செய்துவிட்டதாக ரசீது சகிதமாக பரபரப்பு கிளப்பினார் எஸ்.வி.சேகர். அதற்கு விஷால், ‘எஸ்.வி.சேகர் புக் செய்திருப்பது மண்டபத்திற்கு மட்டும். நாங்கள் கல்லூரியில் தேர்தல் நடத்துவோம்’ என்றார்.
இதற்கிடையே தமிழக அரசின் பதிவுத்துறை அதிரடியாக களத்தில் குதித்து, ‘நடிகர் சங்க கணக்கு வழக்குகள் சம்பந்தமாக குளறுபடிகள் இருக்கின்றன. எனவே தேர்தலை நடத்தக் கூடாது’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அந்த வழக்கில் தேர்தலை நடத்த அனுமதி அளித்து நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனவே திட்டமிட்டபடி எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் திங்கட்கிழமை (ஜூன் 23) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் நேரில் வந்து வாக்களிக்க இருக்கிறார்கள். வெளியூரில் இருப்பவர்கள் தபால் மூலமாக வாக்களிக்க இருக்கிறார்கள்.
நடிகர் சங்க வாக்குப் பதிவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஷால் ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார். இதற்கிடையே இரு தரப்பும் வெளிநபர்களை தேர்தல் நடைபெறும் இடத்தில் குவிக்க இருப்பதாக பரஸ்பரம் புகார் வாசிக்கிறார்கள்.
சென்னையில் இன்று பாக்யராஜ் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் இதை வெளிப்படையான புகாராகவே கூறினர். அத்துடன், தபால் வாக்குப் போடவிருக்கும் பலருக்கும் இன்னமும் வாக்குச்சீட்டு போய்ச் சேரவில்லை என கூறினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான தபால் வாக்குச் சீட்டை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அவருக்கு போய்ச் சேரவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
விஷால் தரப்போ, ‘நீதிமன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தியதால் இதில் தாமதம் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவுக்குள் அனைவருக்கும் வாக்குச் சீட்டு கிடைக்கும்’ என்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல், காரசாரமான மசாலா சினிமா போலவே நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று(ஜூன்.22) பதிவிட்டுள்ள ட்வீட்டில், "மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தபால்வாக்கு இன்று மாலை 6.45க்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிச்சயம் இப்படி நடந்திருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.