"எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட இந்த தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது கவலை அளிக்கிறது" என சென்னை ஐகோர்ட் கூறியிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலைப் பற்றி. அவ்வளவு பரபரப்பான காட்சிகளுடனும், 'சபாஷ்! சரியான போட்டி' சீன்களுடனும் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல். இந்நிலையில், ஜூன்.23ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தலையே நிறுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார் தென்சென்னை மாவட்ட சங்கங்களில் பதிவாளர்.
நடிகர் சங்கத்தில் என்ன தான் நடக்கிறது?
கடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் - ராதாரவி ரவி டீமை கூண்டோடு அப்புறப்படுத்தியது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. அப்போது சரத்குமார் அணிக்கு எதிராக அவர்கள் முன்வைத்த கோஷம், ஊழல், ஊழல், ஊழல்!.
தவிர, தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது, நலிந்த கலைஞர்களை கண்டுகொள்ளாமல் விட்டது, சங்க பணத்தை கையாடல் செய்தது, சங்க நிலத்தில் முறைகேடு, கணக்கு வழக்கில் முறைகேடு என்று குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து, இவையனைத்தையும் நாடக நடிகர்கள் வரை இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்தது பாண்டவர் அணி.
இவையனைத்திற்கும் மேலாக, 'நடிகர் சங்கத்திற்கு என தனிக் கட்டிடம் கட்டித் தருவோம். நடிகர்கள் இணைந்து ஒரு திரைப்படம் நடித்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிரம்மாண்டமாக கட்டிடம் கட்டப்படும்' என்றனர். அதுமட்டுமின்றி, 'நடிகர் சங்க கட்டிடத்தில் தான் எனக்கு கல்யாணமே நடக்கும்' என விஷால் வாக்குறுதி அளிக்க, தேர்தல் முடிவில் பெரும் வெற்றிப் பெற்றது பாண்டவர் அணி.
வாக்குறுதி அளித்தது போல், நடிகர் சங்க கட்டிடம் தொடங்கப்பட்டாலும், அதனை இப்போது வரை முழுமையாக கட்டி முடிக்க முடியவில்லை.
நடிகர்கள் இணைந்து திரைப்படம் நடிப்பதாக அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. விஷால், கார்த்தி இணைந்து நடிப்பதாக இருந்த அந்தப் படத்தில், 2 நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடைபெற, அந்த இரண்டு நாள் ஷூட்டிங்கிலும் கார்த்தி மட்டுமே பங்கேற்றார். விஷால் நடிக்கவில்லை. அதன்பிறகு, அந்த படமும் கைவிடப்பட்டு, அந்த திட்டமே முற்றிலும் கைவிடப்பட்டது.
இதன் பிறகு, நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட, மலேசியாவில் கடந்த 2018ம் ஆண்டு நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது. ரஜினி, கமல் வரை மலேசியாவுக்கு கொண்டுச் சென்றும், சங்கம் எதிர்பார்த்த அளவுக்கு நிதி வந்து சேரவில்லை என்பதே பரவலான குற்றச்சாட்டு. குறிப்பாக, அங்கு நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பு கிடைக்கவில்லை.
விஷால் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்
விஷால் தலைமையிலான ஒட்டுமொத்த பாண்டவர் அணி மீது யாரும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அனைவரது கைகளும் விஷாலை நோக்கியே கை நீட்டுகின்றன.
விஷால் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு, அவரை யாருமே தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தான்.
இரண்டாவது, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டே, தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரானது.
மூன்றாவது மற்றும் மிக முக்கியமான குற்றச்சாட்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் களமிறங்க நினைத்தது. இதன் மூலம் ஆளும் அரசை பகைத்துக் கொண்டது.
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம், விஷால் அரசியல் களம் வரை சென்றது தான் என்பது சில நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மெகா வெற்றிப் பெற்ற நிலையில், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விஷால் வாழ்த்து தெரிவிக்க, அது தொடர்பான தகவல் அரசின் தலைமைக்கு கொண்டுச் செல்லப்பட்டிருக்கிறது.
'இதெல்லாம் தேவையா?... இவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால், ஏன் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்து கொண்டு இந்த வேலையை செய்கிறார். இதனால், அரசின் கோபத்துக்கு ஆளாகி, பாதிக்கப்படப் போவது நாங்கள் தான்' என்கின்றனர் சில சங்க நிர்வாகிகள்.
இதுதவிர, நடிகர் சங்கத்துக்கும் சரி, தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சரி, விஷால் வருவதே இல்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விஷாலின் ரைட், லெஃப்ட் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நடிகர்கள் ராணா, நந்தா தான் விஷால் சார்பாக அனைத்தையும் கேட்கிறார்கள். ஆனால், அவர்களைக் கூட எங்களால் சந்திக்க முடியவில்லை என்கின்றனர் நிர்வாகிகள்.
விஷால், யாருக்கும் பதில் சொல்வதும் இல்லை, யாருடைய கேள்விகளையும் கேட்கவும் தயாராகவும் இல்லை என்கின்றனர் வேதனையுடன்.
இந்தச் சூழ்நிலையில் தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பணத்தை கையாடல் செய்ததாகவும், ஒரு சாராருக்கு மட்டும் விஷால் ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய தயாரிப்பாளர்கள் சிலர், தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். 'சாவியை வைத்து திறக்கலாம்' என்று போலீசார் கூறியதை ஏற்க மறுத்து, 'பூட்டை உடைத்து தான் திறப்பேன்' என்று விஷால் அடம் பிடிக்க, அவரை போலீஸ் கைது செய்த சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்றது தனிக்கதை.
நிலைமை இப்படியாக இருக்க, கடந்த தேர்தலில் விஷால் பக்கமிருந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அவருக்கு எதிரகாவே தற்போது களம் கண்டிருக்கின்றனர். அவர்களின் முக்கியமானவர்கள், ஐசரி கணேஷ், மறைந்த முன்னாள் எம்.பி. ஜே.கே. ரித்தீஷ், நடிகர் உதயா, குட்டி பத்மினி.
இப்போது ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் என்ற புதிய அணி உதயமாகி, 'எனது கலையுலக வாரிசு' என்று எம்.ஜி.ஆர் முன்மொழிந்த, அதிமுக விசுவாசியான பாக்யராஜ் தலைவர் பதவிக்கு நாசருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்.
முன்னர், இலைமறைவு காயாக அரசியல் தொடர்புடன் இயங்கிய நடிகர் சங்கம், இப்போது சற்று வெளிப்படையாகவே நேரடி அரசியல் மோதலாக உருவாகி இருக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், திமுக vs அதிமுக என்று களம் மாறி இருக்கிறது.
இந்த நிலையில் தான், வரும் 23ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தல், வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்த குழப்பத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்ட விஷால், இனி அவர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத வரை, மீண்டும் விஷால் ஆட்டம், சங்க தேர்தலில் செல்லுபடியாகாது என்கின்றனர் விஷால் எதிர் தரப்பினர்.
இதுகுறித்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான சோனியா போஸிடம் நாம் பேசினோம். அவர் கூறுகையில், "விஷால் மீது எவ்வளவு தான் குறை சொல்வீர்கள்?. ஒரு தனி மனிதரை இத்தனை பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால், அவர் எவ்வளவு வலிமையானவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எங்கேயோ, யார் கையிலேயோ செல்லவிருந்த நடிகர் சங்க கட்டிடத்தை இன்று நாங்களே கட்டி வருகிறோம் என்றால், அதற்கு காரணம் விஷால் மட்டுமே. அவருடைய உழைப்பு அவ்வளவு அதில் அடங்கியிருக்கிறது. அந்த கட்டிடத்தை கட்டிவிடக் கூடாது என்பதற்காக எங்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ, அவ்வளவு தொல்லை கொடுக்கின்றனர். எவ்வளவு வழக்குகள்; அவற்றையெல்லாம் மீறி, நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சென்றார். ஆனால், அங்கு அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை. ஏனெனில், நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் தொழிலாளிகள்; தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் முதலாளிகள். அங்கு முதலாளிகளை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் விவகாரத்தில், அவருக்கு யாரோ தவறாக கைட் செய்திருக்கலாம். இவற்றைத் தவிர விஷால் என்ன செய்தார்?
நடிகர் சங்கத்தில் நாங்கள் உணர்வுப்பூர்வமாக விருப்பப்பட்டு தான் பணியாற்றி வருகிறோம். ஒரு மீட்டிங் என்றால் கூட, அது மலேசியாவில் நடந்தாலும் கூட கை காசு போட்டு தான் சென்று வருகிறோம். அவ்வளவு கணக்கு பார்த்து நடிகர் சங்கத்தை நாங்கள் நடத்தி வருகிறோம்.
ஐசரி கணேஷ் கடைசி நிமிடம் வரை எங்கள் அணியில் தான் இருந்தார். என்ன காரணம் என்றே தெரியவில்லை, இப்போது எதிரணியில் நின்று பேசுகிறார். கட்டிடம் தொடங்கும் போது அவர் தான் இரண்டரை கோடி பணம் கொடுத்து எங்களுக்கு உதவினார்; மறுப்பதற்கில்லை. ஆனால், வட்டியுடன் அதை திருப்பிக் கொடுத்துவிட்டோம்.
ஐசரி கணேஷ், மறைந்த தனது தந்தைக்காக சமீபத்திய நடத்திய விழாவில் கூட நாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாங்களும் அதில் கலந்து கொண்டிருந்தோம். இத்தனைக்கும் அவர் நடிகர் சங்க Trustee-களில் ஒருவராக இருந்தார். அவ்வளவு சப்போர்ட்டிவாக இருந்தவர், ஏன் எதிரணியில் இருக்கிறார் என்றே புரியவில்லை.
நாங்கள் என்ன மாத சம்பளம் வாங்கிக் கொண்டா, நடிகர் சங்கத்தில் பணிபுரிகிறோம்? இது நம்முடையது; நாம் தான் இவற்றில் வேலை செய்ய வேண்டும் என ஒவ்வொருவரும் பணியாற்றுகிறோம்.
குட்டி பத்மினி அம்மா, கடந்த ஜூன் 6ம் தேதி முன்பு வரை, எங்களுக்கென இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் தான் இருந்தார். அன்று இரவு திடீரென வாட்ஸ் அப் குரூப்பில் அவர் வெளியேறிய பிறகு தான், எங்களுக்கே தெரிந்தது, அவர் எதிரணிக்கு போகிறார் என்று.
விஷால் மேலிருக்கும் தனிப்பட்ட கோபத்தையோ, விரோதத்தையோ ஏன் சங்க தேர்தலில் காட்ட வேண்டும்? அவர்கள் தனிப்பட்ட முறையில் விஷாலிடம் தங்ககளது கோபத்தை தீர்த்துக் கொள்ளலாமே? இவ்வளவு தூரம் ஒன்றாக நின்றுவிட்டு, இப்போது திடீரென எதிர் அணியில் இருப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
ஆனால், இவர்களைத் தவிர, எங்களைப் போன்ற பெரும்பாலான நிர்வாகிகள் அனைவரும் பாண்டவர் அணியில் தான் இருக்கிறோம். விஷாலுக்கு ஆதரவாகவே இருக்கிறோம்; இருப்போம். இங்கே தவறு நடந்தால், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கார்த்தி, நாசர், பூச்சி முருகன் போன்றோர், தவறு நடக்கிறது என்று தெரிந்தும் பாண்டவர் அணியில் இருக்கிறார்களா என்ன? இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், நாங்கள் எங்கள் பணியை சிறப்பாகவே செய்துக் கொண்டிருக்கிறோம் என்று!" தனது பேச்சை முடித்தார்.
நடப்பவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது ஒன்று தெளிவாக நமக்கு தெரிகிறது. நடிகர் சங்கத்தில் விஷால் சிறப்பாக பணியாற்றியதாக கூறினாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் கால் வைத்தது, இடைத் தேர்தலில் களமிறங்கியது, ஆளுங்கட்சிக்கு எதிரான விஷாலின் சில கருத்துகள் போன்றவற்றை, விஷாலுக்கு நெருக்கமான நிர்வாகிகளே விரும்பவில்லை. அதுமட்டுமின்றி, நடிகர் சங்கம் என்றால், அங்கு விஷால் மட்டுமல்ல; எல்லோரும் இருக்கிறோம்... விஷாலை பற்றி மட்டும் யாரும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை என்பதும் அவர்களது ஆதங்கமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.