Nadigar Sangam Elections: பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதற்கு முன் கடந்த 2015-ல் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது. இதில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபரோடு முடிந்த நிலையில், எஅடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நிறைவு பெறாததையொட்டி, தேர்தலை 6 மாதத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பதவியில் இருக்கும் விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிட்டனர். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன் போட்டியிட்டார். இவர்களுடன் குஷ்பு, லதா, பிரசன்னா, சிபிராஜ், ராஜேஷ், சரவணன், கோவை சரளா, மனோபாலா உள்பட 24 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர தாஸ்’ அணி களம் இறங்கியது. இதில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத்தலைவர் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுடன் பரத், சின்னி ஜெயந்த், காயத்ரி ரகுராம், நிதின் சத்யா, பூர்ணிமா பாக்யராஜ், பாண்டியராஜன், கே.ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை காரணம் காட்டி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து அறிவித்தபடி, நேற்று சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
இதில் நடிகர்கள், மல்ஹாசன், சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், பிரபு, நாசர், பாக்யராஜ், ஆர்யா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், விவேக், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கே.ஆர். விஜயா, குஷ்பு, சுஹாசினி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
ஓட்டுப் போடவில்லை
நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு தபால் வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்து இருந்தார்.
தவிர, அஜித், ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை. இதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல் முன்னணி நடிகைகள் ஓட்டுப் போடவில்லை என்றாலும், முன்னணி நடிகரான அஜித் இத்தேர்தலை புறக்கணித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாலை 5 மணி வரை பதிவான வாக்குப் பதிவில் மொத்தம் 1604 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தபால் ஓட்டுகள் தவிர்த்து இந்த வாக்குகளின் எண்ணிக்கை 50.55 சதவீதமாகும்.
உயர் நீதிமன்றம் வாக்கு எண்ணும் தேதியை பின்னர் அறிவிக்க இருப்பதால், வாக்குப் பெட்டிகள் நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.